Videos

Full View
cruds.institution.fields.id
Full View

நாடகம் 

நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனைஇசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம்ஒலிஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை ழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.

  • 'இயல்' என்பது சொல் வடிவம்,
  • 'இசை' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
  • 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.

"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை, தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து மேடை நாடகங்களாக மாறி இலக்கியங்களாக மறுமலர்ச்சி பெற்றன. இது தொன்றுதொட்டு படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம் என்கின்றனர். நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறிவதற்கு முன்பே “போல செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக அமைந்ததை நம்மால் காணமுடியும்.

ஒருவர் செய்வதைப்போல தானும் செய்து பார்க்க வேண்டும் எனும் எண்ணம் மனித உணர்ச்சிதான் நாடகம் தோன்ற காரணமாக அமைந்தது.

பண்டைய மரப்பாவைக் கூத்து, பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்து, பின்னர் தோல்பாவைக் கூத்தாக, நில பாவை கூத்தாக மாறியிருக்கின்றது.

உயிரற்ற பொருட்களை வைத்து விளையாடிய விளையாட்டு படிப்படியே உயிருள்ள மனிதர்களை வேடம் புனையச் செய்து, ஆடிப்பாடி நடிக்க வைத்ததே பாவைக்கூத்து முதல் பல்வேறு நிலைகளில் நாடகம் வளர்ச்சி அடைந்ததன் விளைவே இன்று நாம் காணும் புதிய நாடாக உலகில் அடியெடுத்து வைத்து இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

Full View

நாடக வகைகள்

உலக நாடகங்களை ஆராய்ச்சி செய்தவர்கள் இருபெரும் பிரிவுகளில் நாடகங்களை அடக்கிக் காட்டுவர். அவை,

  • இன்பியல் நாடகங்கள்
  • துன்பியல் நாடகங்கள்

மகிழ்ச்சியான நிலையில் நாடகம் முடிவுற்றால் இன்பியல் நாடகம் என்றும் துயர முடிவைக் கொண்டிருந்தால் துன்பியல் நாடகம் என்றும் நாடகங்களைப் பிரித்துக் காட்டினர்.

தமிழ் நாடகங்களிலும் பிற இந்திய மொழி நாடகங்களிலும் துன்பியல் முடிவு என்பது விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று அன்று. இந்திய நாடகங்கள் பெரும்பாலும் இன்பியல் முடிவைக் கொண்டவையாகவே இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் மேனாட்டு நாடகச் செல்வாக்கு இந்தியாவில் ஏற்பட்ட பின்னர்தான் துன்பியல் முடிவுகள் நாடகங்களில் பரவின.

பழைய நாடக வகைகள்

பழைய தமிழ் நாடகங்களும் இருபதாம் நூற்றாண்டு நாடகங்களும் வேறு வகையான பிரிவுகளைக் கொண்டிருந்தன. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் பழந்தமிழ் உரையாசிரியர்கள் பின்வருமாறு வகைப்படுத்தினர். அவை,

  1. வேத்தியல்
  2. பொதுவியல்

அரசர்களும் அரசர்களை ஒத்த பெரியவர்களும் காணும் நாடக வகை வேத்தியல். பொதுமக்கள் காண்பதற்குரிய நாடக வகை பொதுவியல்.

இந்த நாடகம் அல்லது கூத்து வகைகளை இன்னும் நுட்பமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பகுத்துக் காட்டுகிறார்.

  • வசைக் கூத்து
  • புகழ்க் கூத்து
  • வரிக் கூத்து
  • வரிசாந்திக் கூத்து
  • சாந்திக் கூத்து
  • விநோதக் கூத்து
  • ஆரியக் கூத்து
  • தமிழ்க் கூத்து
  • இயல்புக் கூத்து
  • தேசிக்கூத்து

என்பன அடியார்க்கு நல்லார் வகைப்படுத்தும் பத்துக் கூத்து வகைகள்.

3.1.2 இருபதாம் நூற்றாண்டு நாடக வகைகள்

மேடை நாடகமே தம் வாழ்வின் பெரும்பணி என்று செயல்பட்டவர் அவ்வை தி.க. சண்முகம். அவர், மேடை நாடகங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் எனக் கூறுகிறார்.

“தமிழ் நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம், பக்தி இலக்கிய நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி இலக்கிய நாடகம், சமுதாய நாடகம், சமுதாயச் சீர்திருத்த நாடகம், தேசிய நாடகம், நகைச்சுவை நாடகம் என நாடகங்களை இவ்வாறு பலவகைப்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு பிரச்சார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.

1. புராண நாடகம்

சிவலீலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா, மகாபாரதம் போன்றவை புராண இதிகாச நாடகங்கள்.

2. வரலாற்று நாடகம்

இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தஞ்சை நாயக்கர் தாழ்வு, இமயத்தில் நாம் போன்றவை வரலாற்று நாடகங்கள்.

3. கற்பனை நாடகம்

இரண்டு நண்பர்கள், லீலாவதி, சுலோசனா, வேதாள உலகம் போன்றவை கற்பனை நாடகங்கள்.

4. பக்தி நாடகம்

நந்தனார், சிறுத்தொண்டர், பிரகலாதன், மார்க்கண்டேயர் போன்றவை பக்தி நாடகங்கள்.

5. சமுதாய நாடகம்

உயிரோவியம், வேலைக்காரி, நாலுவேலி நிலம், டம்பாச்சாரி விலாசம் போன்றவை சமுதாய நாடகங்கள்.

6. சீர்திருத்த நாடகம்

அந்தமான் கைதி, இரத்தக் கண்ணீர், இழந்த காதல், வாழ்வில் இன்பம் போன்றவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள்.

7. நகைச்சுவை நாடகம்

சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், துப்பறியும் சாம்பு, ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது போன்றவை நகைச்சுவை நாடகங்கள்.

8. பிரச்சார நாடகம்

பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், காகிதப் பூ போன்றவை பிரசார நாடகங்கள்.

இலக்கிய நாடக வகைகள்

மேடையில் நடிக்கப்பெறும் நாடகங்களை வகைப்படுத்துவதைப் போல் இலக்கியமாக எழுதப்பெறும் நாடகங்களை இருவகையில் பிரிக்கலாம். அவை,

  1. உரைநடை நாடகங்கள்
  2. செய்யுள் நாடகங்கள்

இந்த இருவகை நாடகங்களும் நடிப்பதற்கும் படிப்பதற்குமாக எழுதப்படும் நாடகங்களாகும்.

காட்சி அமைப்பையும் காண்போரையும் மனத்துள் கொள்ளாமல் மொழிநடைக்கும் கருத்துக்கும் மட்டுமே முன்னுரிமை தந்து எழுதப் பெறும் நாடகங்களை அரங்கேற்ற முடியாது. இவற்றைப் படித்து மட்டுமே இன்புறலாம்.

மொழிநடைக்கும் முதன்மை தந்து, காட்சி அமைப்பையும் முன்னிறுத்தி எழுதப்படும் நாடகங்களைக் கண்டு மகிழ்வதுடன் கற்றும் மகிழலாம்.

Full View

நாடகமும் விளையாட்டும்

இந்த நாடகம், விளையாட்டு உணர்ச்சியில் இருந்து தோன்றியது என்பது பலர் கருத்து. இந்த விளையாட்டு உணர்ச்சி, கலையுணர்ச்சி மிக்கவர்களிடம் இருந்து ஒரு கலையாக மாறியது.

மனிதர்கள் விளையாடிய விளையாட்டு மரப்பொம்மைகளின் விளையாட்டாகவும், தோல்பாவை விளையாட்டாகவும், நிழற்பாவை விளையாட்டாகவும் மாறியது. இவற்றை ஒவ்வொன்றாகச் சுருங்கிய நிலையில் அறிவோம்.

பொம்மலாட்டம்

மரத்தால் ஆகிய பொம்மைகளைக் கையில் பிடித்து இப்படியும் அப்படியும் நகர்த்துவர்; எதிரெதிராக இரு பொம்மைகளை மோதச் செய்வர்; இரண்டையும் அன்புடன் நெருங்கச் செய்வர்; ஆரவாரத்துடன் குதிக்கச் செய்வர். இவ்வாறு பல வகைகளில் பொம்மை விளையாட்டை முதலில் காட்டினார்கள். இது பொம்மலாட்டம் அல்லது மரப்பாவைக் கூத்து எனப் பெயர் பெற்றது.

மரத்தால் செய்த பொம்மைக்குப் பதிலாக மண்ணாலும் பழைய துணிகளாலும் பொம்மை செய்து செயற்கையாகக் கைகால்களைப் பொருத்தினார்கள். இப்பொம்மைகளின் கை கால்கள், கழுத்து முதலிய உறுப்புகள் அசையும் விதமாகக் கயிறுகளைக் கட்டி அக்கயிறுகளை இயக்கும் வேலையைக் கலைஞர்கள் தம் கைகளில் வைத்துக் கொண்டனர். தம் கைகளின் அசைவிலேயே பொம்மைகளின் அசைவுகளைக் காட்டினார்கள். இந்த விளையாட்டு பொம்மலாட்டம் எனப்பட்டது.

தோல்பாவைக் கூத்து

மரப்பொம்மை, மண் பொம்மை செய்ததைப் போலவே விலங்குகளின் தோல்களைக் கொண்டும் உருவங்களை வடித்தனர். மென்மையான தோல்களின் மூலம் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்களைச் செய்தனர். இப்பொம்மைகள் வளைந்து நெளிந்து விடாமல் இருப்பதற்காக இவற்றை மூங்கில் தப்பை (சிறு குச்சிப்பட்டைகள்) களில் தைத்தனர். இந்தத் தோல் பாவைகளைக் கொண்டு விளையாட்டுக் காட்டினார்கள். இது தோல்பாவைக் கூத்து எனப்பட்டது.

நிழற்பாவைக் கூத்து

தோல் பாவைகளைப் பார்வையாளர்களுக்கு நேரடியாகக் காட்டாமல் வெள்ளைத் திரைச் சீலைகளுக்குப் பின்னால், ஒளிபொருந்திய விளக்குகளை வைத்து அவ்வொளியில் தோல்பாவைகளைக் காட்டினார்கள். இவ்வாறு காட்டும் போது, தோல் பாவைகளின் பிம்பம் தான் பார்வையாளர்களுக்குத் தெரியுமே தவிர நேரடியாகத் தோல் பாவைகளைப் பார்க்க முடியாது. இப்படிக் காட்டும் முறை தோல் பாவைக் கூத்து எனப்பட்டது.

தோல் பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியவற்றில் இராமாயணம், பாரதம் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட கதை நிகழ்ச்சிகளும் சேர்த்துக் கூறப்பட்டன. இக்கதை நிகழ்ச்சிகள் பெருகப் பெருக நாடகத் தன்மையும் பெருகிக் கொண்டே வந்தது.

 

Recent Question Papers & Keys

Comments