Videos

Full View
cruds.institution.fields.id
Full View

6ம் வகுப்பு தமிழ்

தொடக்கக் கல்வியின் இறுதி வகுப்பான ஐந்தாம் வகுப்பை முடித்து இடைநிலை பள்ளி வகுப்புகளில் முதல் வகுப்பான ஆறாம் வகுப்பிற்கு வந்துள்ள மாணவச் செல்வங்களே! வெற்றிக்கு வழி குழுமம் உங்களை அன்போடு வாழ்த்தி வரவேற்கிறது!! மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு உங்கள் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்குமான பொதுக் கருத்துக்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுகுறிப்புகளின் கீழ் பகுதியில் pdf, ppt files & vedio links போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள Study Materials / Question Papers & Keys போனற பகுதிகளை கிளிக் செய்தால்  உங்களுக்குத் தேவையான பாட உதவிக் குறிப்புகளையும் வினாத்தாள் விடைத்தாள் குறிப்புகளையும் படிக்கலாம்.

Full View

பருவம் - 1 இயல் - 1 தமிழ்த்தேன்

பருவம் - 1 இயல் - 1     தமிழ்த்தேன்

 இவ்வியலில் தமிழ்த்தேன் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள “இன்பத் தமிழ்”, “தமிழ்க்கும்மி” ஆகிய செய்யுள் பகுதியானது தமிழின் சிறப்பு, தொன்மை மற்றும் அதன் புகழ் போன்றவற்றை பாடி மகிழும் வகையில் அமைந்துள்ளது. “வளர்தமிழ்” என்ற உரைநடைப்பகுதி கற்காலம் முதல் இப்போதுள்ள கழியுக காலம் வரை தமிழ் மொழியின் செம்மை தன்மையையும், வளர்ச்சி நிலையையும் கூறுகிறது. “கனவு பலித்தது” எனும் விரிவானப் பகுதி சாதனைக்கு மொழி ஒரு தடையே இல்லை என்ற கருத்தை முன் வைக்கிறது. “தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்” எனும் இலக்கணப் பகுதி தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அதன் வகைகளையும், தொகுதிகளையும் விவரித்து கூறுவதாக அமைகிறது. “தமிழ்த்தேன்” என்ற பொருண்மையில் இத்தலைப்புகள் அனைத்தும் உள்ளன.

 

செய்யுள் : 1. இன்பத்தமிழ்
    20ஆம் நூற்றாண்டில் பாரதியாருக்குப் பிறகு தனக்கென தனிச்சிறப்பும், முத்திரையும் பதித்து, கவிஞருக்குரிய சிறப்பையும், தகுதியையும் பெற்றவராய் வாழ்ந்தவர் பாரதிதாசன். இவர் தமிழ்மீது தீராத காதல் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அழிக்கமுடியாத சில அடையாளங்களை விட்டு சென்றுள்ளார். அவற்றுள் ஒன்றுதான் பாரதிதாசன் கவிதைகள். அதில் இன்பத்தமிழ் என்னும் தலைப்பில் அமைந்த செய்யுளில் தமிழின் வேறு பெயர்களையும் அதன் உயர்வையும், சிறப்பையும் கவினுற இயற்றியுள்ளார். தமிழுக்கு அமுதம், நிலவு, மணம் என பெயர் சூட்டியுள்ளார். அந்த இன்பத் தமிழானது உயிருக்கு இணையானதாகவும், சமூக வளர்ச்சிக்கு அடிப்படை நீராகவும் உள்ளது என பாடுகிறார். இளமைக்கு பால் போன்ற தமிழானது புலவர்களுக்கு கூர்மையான வேல் போன்ற கருவி என்கிறார். உயர்விற்கு எடுத்துக்காட்டான வானத்தை தமிழுடன் ஒப்பிட்டு உழைத்துக் கலைத்தவர்களின் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் என்றும் கூறுகிறார். அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் என்றும், அது கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிகுந்த வாள் போன்றும் உள்ளது என தமிழைச் சிறப்பித்து  பாடியள்ளார்.

 

செய்யுள் : 2. தமிழ்க்கும்மி
    பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “கனிச்சாறு” என்னும் நூலில் தமிழ்கும்மி என்ற பாடலை இயற்றியுள்ளார். இதில் தமிழின் தொன்மையையும், சிறப்பையும் பெண்கள் கூட்டமாகக் கூடி கும்மியடித்து ஆடி, பாடி மகிழும் படியாக எழுதியுள்ளார். தமிழின் புகழ் எல்லா திசையிலும் பரவும் வகையில் கும்மி கொட்டுவோம். பல நூற்றாண்டுகளை கடந்த தமிழ் மொழியில் அறிவு ஊற்றாகிய பல நூல்கள் உள்ளன. அவை பெரும் பேரிடர்களிலும் அழியாமல் நிலைத்திருக்கும். பொய் எனும் பண்பை நீக்கி, மனத்தில் உள்ள அறியாமையை போக்கும். உயிர் போன்ற உண்மையை ஊட்டி, அறத்தை தரக்கூடிய இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி. இந்த உலகில் சிறந்து வாழ வழிகாட்டும் சிறந்த மொழி தாய் மொழியாம் தமிழ் மொழியே என பெருமைப்படுத்தி பாடியுள்ளார்.

 

உரைநடை : வளர்தமிழ்
    தமிழ்மொழியின் அக்காலச் சிறப்பிலிருந்து இக்காலச் சிறப்பு வரை அதன் வளர்ச்சியை பற்றி இந்த உரைநடை பகுதி கூறுகின்றது. தமிழ் மொழியின் தொன்மையை பல காலக்கட்டங்களில் பல கவிஞர்கள் வியந்து பாடியுள்ளனர். தமிழ் மொழி எழுதுவதற்கும், பேசுவதற்கும், படிப்பதற்கும் எளிமையானது. சொற்களையும், எழுத்துக்களையும் ஒழுங்கு முறைப்படுத்தி சீராக அமைத்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறது. ஒரு எழுத்து ஒரு சொல் தருவதும் உண்டு. ஒரு சொல் பல பொருள் தருவதும் உண்டு என்று அதன்; வளமையையும், இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என இருந்த காலம் மாறி அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என அதன் வளர்ச்சியையும் கூறுகிறது. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சின் மாற்றத்திற்கு ஏற்ப தமிழில் பல புதிய கலைச் சொற்களும் தோன்றியுள்ளன என தமிழின் வளர்ச்சி நிலையை கூறுவதாக இந்த உரைநடைப்பகுதி அமைந்துள்ளது.

 

துணைப்பாடம் : கனவு பலித்தது (கடிதம்)
    தமிழுக்கு அறிவியல் புதிதல்ல. அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் இன்சுவை என்ற மாணவி தன் அத்தைக்கு கடிதம் எழுதுகிறாள். தான் இளம் வயதிலேயே அறிவியல் அறிஞராக வேண்டும் என்று விருப்பம் கொள்கிறாள். ஆனால் தமிழில் படித்து அறிவியல் அறிஞராக முடியாது என்ற மற்றவரின் கருத்தை எண்ணி கவலை அடைகிறாள். நிகழ்ந்தவற்றை தன் அத்தைக்கு கடிதமாக எழுதுகிறாள். அத்தை அவளுக்கு பதில் கடிதம் எழுதுகிறார். “சாதனைக்கு மொழி ஒரு தடையே இல்லை” நீண்ட காலங்களாகவே அறிவியல் சிந்தனையோடு விளங்கியவர்கள் தமிழர்கள். அதற்கு தொல்காப்பியம், முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாகவே உள்ளன என்பதை கடிதமாக எழுதுகிறார். மேலும் நல்ல தமிழ் புத்தகங்களை நூலகத்திற்கு சென்று படிக்கவும் அறிவுரை கூறுகிறார். அந்த அறிவுரையை ஏற்று படித்த இன்சுவை இளம் ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியில் சேர்வதையும், தன்னால் இயன்ற உதவியை சமூதாயத்திற்கு செய்வதாகவும் கூறி தன் அத்தைக்கு மீண்டும் ஒரு கடிதமாக எழுதுவதாக இக்கதைப் பகுதி அமைந்துள்ளது. 

 

இலக்கணம் : தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்


    மொழியை எவ்வாறு பேச வேண்டும் எழுத வேண்டும் என சில வரைமுறைகள் உள்ளன. அந்த வரைமுறையே இலக்கணம் ஆகும். கவிதை இயற்றுவதற்கும், இலக்கிய பாடல் அமைப்பதற்கும் இந்த இலக்கண விதியை பின்பற்ற வேண்டும். தமிழ் மொழியில் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து வகையாக பிரித்துள்ளனர். முதலில் எழுத்திலக்கணத்தில் எழுத்தை ஒலிவடிவ எழுத்து, வரி வடிவ எழுத்து என இரண்டாக பாகுபடுத்தியுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் அதிகமாக வரிவடிவ எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர். எழுத்துக்களை உயிரெழுத்து, மெய்யெழுத்து என பிரித்து அவற்றை உச்சரிக்கும் முறை, ஓசை, மாத்திரை அளவு என எழுத்துக்களை வகைப்படுத்தி அவற்றின் தொகுதிகளைப் பற்றி கூறுவதாக இந்த இலக்கணப்பகுதி அமைந்துள்ளது.


 

- WTS Teachers team
Full View

பருவம் - 1 இயல் - 2 இயற்கை இன்பம்

பருவம் - 1 இயல் - 2  இயற்கை இன்பம்

இந்த இரண்டாம் இயலில் இயற்கை இன்பம் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சிலப்பதிகாரச்  செய்யுளானது இயற்கைக்கு சோழ மன்னனின் சிறப்பை ஒப்பிட்டு நிலவு, சூரியன், மழை போன்றவற்றை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. “பாரதியார் கவிதைகள்” எனும் தலைப்பின்கீழ் அமைந்த “காணி நிலம்” என்ற செய்யுள் பகுதி பாரதியாரின் கனவு இல்லத்தை பற்றி கூறுகிறது. பறவைகள் இடம் பெயர்தலையும், சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணங்களையும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் “சிறகின் ஓசை” எனும் உரைநடைப் பகுதி விளக்குகிறது. மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் முயற்சியைப் பற்றியே இக்கதை அமைகிறது. கடலில் தனது முயற்சியால் மீனுடன் போராடிய கிழவன் இறுதியில் தனது முயற்சியின் பலனை அடைந்தார? இல்லையா? என்பதை “கிழவனும் கடலும்” என்ற துணைப்பாடப்பகுதி விளக்குகிறது. எழுத்துக்களை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாக பிரித்து அவற்றின் வகைகளை பற்றி கூறுவதே “முதலெழுத்தும் சார்பெழுத்தும்” எனும் இலக்கணப் பகுதியாகும். திருக்குறளில் அறத்துப்பால் எனும் பெரும் பிரிவின் கீழ் அமைந்த கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, மக்கட்பேறு, அன்புடைமை, இனியவை கூறல் போன்ற அதிகாரங்களில் சில குறள்கள் மட்டுமே பாடமாக கொடுக்கப்பட்டுள்ளன. வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துக்களை “திருக்குறள்” எனும் இச்செய்யுள் பகுதி கூறுகிறது. இவையே இயற்கை இன்பம் எனும் பொருண்மையில் அமைந்துள்ள தலைப்புகள் ஆகும். 

செய்யுள் : 1. சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் எனும் கருத்து உள்ளது. ஆனாலும் தனது சிலப்பதிகார நூலில் சோழ மன்னனின் சிறப்பை ஒப்பிட்டு இயற்கையை வாழ்த்துகிறார். ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை குளிர்ச்சியுடையதைப் போல வெண்மையான நிலவும் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. காவிரி ஆறு பாயக் கூடிய வளம் கொழிந்த நாட்டை ஆட்சி செய்யக் கூடிய சோழ மன்னனின் ஆணைச் சக்கரம் போல சிகரம் போன்றுள்ள இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது சூரியன். கடலை எல்லையாக உடைய உலகிற்கு மன்னன் அருள் செய்வது போல மழையானது வானிலிருந்து பொழிந்து மக்களுக்கு அருள் செய்கிறது. எனவே வெண்ணிலவையும், கதிரவனையும், மழையையும் போற்ற வேண்டும் என இயற்கையை வாழ்த்துவதாக இச்செய்யுள் பகுதி அமைந்துள்ளது.

செய்யுள் : 2. காணி நிலம்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதி. விடுதலை உணர்வை மக்கள் மனதில் விதைக்கவும், பெண் உரிமைக்காகவும் இவர் எழுதிய பாடல்கள் பலவாகும். அதுமட்டுமின்றி மண் உரிமைக்காகவும் பாடல்கள் இயற்றியுள்ளார். தனது வீடானது தனக்குரிய நிலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை ‘பாரதியார் கவிதைகள்’ எனும் தொகுப்பில் “காணி நிலம்” என்ற தலைப்பில் பாடியுள்ளார். காணி அளவு நிலத்தில் அழகான தூண்களும், தூய மாடங்களையும் கொண்ட ஒரு மாளிகை இருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும், இளநீரைத் தரும் தென்னை மரங்களும் இருக்க வேண்டும். நிலவின் ஒளி வீச வேண்டும். குயின் குரல் கேட்க வேண்டும். இளந்தென்றல் காற்று வர வேண்டும் என பாரதி தனது கனவு இல்லத்தைப் பற்றி காணி நிலம் எனும் இச்செய்யுள் பகுதியில் பாடியுள்ளார்.

உரைநடை : சிறகின் ஓசை

பறவைகளின் தற்போதைய நிலைப் பற்றியே இந்த உரைநடைப் பகுதி பேசுகிறது. மனிதர்களைப் போலவே பறவைகளும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் தம் சொந்த இடத்;தை அடைவதையும், அவ்வாறு இடம் பெயர்தலை ‘வலசை போதல்’ என்றும் கூறுகின்றனர். 1500 ஆண்டுகளுக்கு முன்பே சத்திமுத்தப் புலவர் தம் பாடலில் “வலசை போதல்” பற்றிய செய்தியை பாடியுள்ளார். உணவு, இருப்பிடம், தட்ப வெப்பநிலை மாற்றம், இனபெருக்கம் போன்றவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. ‘வலசை’ போகும் போது பறவைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், தற்போது அழிந்து வரக் கூடிய பறவை இனமான சிட்டுக்குருவி பற்றியும், அது அழிவதற்கான காரணம் பற்றியும், அதை காப்பாற்ற மேற்கொள்ளக் கூடிய வழிமுறையையும் கூறுகிறது. பாரதியார் மற்றும் சலீம் அலியைப் போல காக்கை குருவி நமது சாதி என்பதை அறிந்து பறவைகள் இல்லாத உலகில் நம்மால் வாழ முடியாது என்பதை உணர்ந்து இயற்கையைப் போற்றி பறவைகளை காக்க வேண்டும் எள்பதை இந்த உரைநடைப் பகுதி விளக்குகிறது. 

துணைப்பாடம் : கிழவனும் கடலும்

மனிதன் இயற்கையோடு போரடிக்கொண்டே இருக்கிறான். அந்தப் போராட்டமே அவன் வாழ்வை அமைக்கிறது. “கிழவனும் கடலும்” எனும் இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. இவர் ஒரு மீனவர். இவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று மீன் பிடிக்காமல் ஒரு நாள் கூட திரும்பியதில்லை. மனோலின் எனும் சிறுவனை மீன் பிடிக்க கற்றுக் கொள்வதற்காக அவனது பெற்றோர் சாண்டியாகோ உடன் கடலுக்கு அனுப்புகின்றனர். முதல் நாற்பது நாளில் ஒரு மீன் கூட கிடைக்காததால் அவனுடைய பெற்றோர் அவனை வேறு படகிற்கு அனுப்புகின்றனர். பிறகு அவர் மட்டும் மீன் பிடிக்க செல்கிறார். அன்று எண்பத்து ஐந்தாவது நாள.; இன்று கண்டிப்பாக மீனைப் பிடித்துவிட்டே கரைக்கு செல்ல வேண்டும் என்று சாண்டியாகோ கடலுக்குள் செல்கிறார். அன்றும் ஒரு மீன் கூட கிடைக்காத நிலையில் படகிலேயே இரவு தங்கிவிடுகிறார். 

அடுத்த நாள் பசியுடனும், சேர்வுடனும் இருந்த நண்பகல் வேலையில் ஏதோ ஒன்று தூண்டில் கயிறை இழுப்பதை கவனித்தார். மீன் தான் என்பதை உறுதி செய்துகொண்டு; தூண்டிலை வேகமகாக படகிற்கு இழுக்க முயற்சி செய்கிறார்;. முடியவில்லை. சோர்வுடன் இருந்த சாண்டிக்கோ எப்படியும் மீனைப் பிடித்தே தீருவேன் என்று பல போராட்டங்களுக்கு பிறகு அந்த மீனைக் கொன்று பிடிக்கிறார்;. படகை நோக்கி பல மீன்களும், சுறாக்களும் வருக்கின்றன. அனைத்துடனும் போராடி ஒரு வழியாக கரையை அடைகிறார். சுறாக்கள் தின்றது போக கடைசில் மீனின் தலையும் அதன் எலும்புகளும் தான் மிஞ்சியது. சாண்டியாகோவை பார்க்க மனோலின் வருகிறான். எவ்வளவு பெரிய மீன் அது ‘நீங்கள் பெரிய வீரன் தான் தாத்தா’ என்று கூறுகிறான். சாண்டியாகோ நடந்தவற்றை அவனிடம் வருத்தமாக கூறுகிறார். மனோலின் தாத்தா உங்கள் திறமையும், விடாமுயற்சியும் வென்றுவிட்டது. வெற்றி, தோல்வி என்பதை தவிர்த்து சாம் மேற்கொள்ளும் முயற்சி எவ்வளவு என்பதை மையமாக கொண்டே இத்துணைப்பாட பகுதி அடமைந்துள்ளது.  

இலக்கணம் : முதலெழுத்தும் சார்பெழுத்தும்

எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும். முதலெழுத்து என்பது உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய் எழுத்துகள் பதினெட்டும் சேர்ந்த முப்பது எழுத்துக்களும் ‘முதல் எழுத்துக்கள்’ ஆகும். இது எழுத்து தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதல் காரணமாக உள்ளது. சார்பெழுத்து என்பது முதல் எழுத்தை சார்ந்து வருவது ஆகும். இது பத்து  வகைப்படும். அதில் முதல் இரண்டான உயிர்மெய் மற்றும் ஆய்தம் பற்றிய விளக்கங்கள் மட்டுமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இச்செய்திகளே முதலெழுத்தும் சார்பெழுத்தும் எனும் இலக்கணப்பகுதியில் அமைந்துள்ளது. 

- WTS Teachers team
Full View

பருவம் - 1 இயல் - 3 எந்திர உலகம்

எந்திர உலகம்

“எந்திர உலகம”; எனும் இத்தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட பகுதிகளானது அறிவியலின் வளர்ச்சி நிலைகளை பற்றியே கூறுகிறது. “அறிவியல் ஆத்திசூடி” என்ற செய்யுளானது அறிவியலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது. “அறிவியலால் ஆள்வோம”; எனும் இச்செய்யுள் பகுதியானது அறிவியல் வளர்ச்சியால் இவ்வுலகின் வளர்ச்சி நிலைக் குறித்து விளக்குகிறது. “கணியனின் நண்பன்” என்ற உரைநடைப் பகுதியானது தானியங்கிகள் பற்றியும,; அதன் செயல்பாடுகள் பற்றியும், எந்திரத்திற்கும் தானியங்கிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றியும் கணியனும் எந்திர மனிதனும் உரையாடும் வகையில் அமைந்துள்ளது. “ஒளி பிறந்தது” எனும் விரிவானப் பகுதியானது ஒரு தொழில் நுட்ப கண்காட்சியில் அப்துல் கலாம் அவர்களிடம் பெரிய திரையில் மாணவர்கள்; கேள்விகள் கேட்டு அதற்கு கலாம் அவர்கள் விளக்கம் அளிப்பது போல் எழுதப்பட்டுள்ளது. “மொழிமுதல், இறுதி எழுத்துக்கள்” எனும் இலக்கணப் பகுதியானது மொழிக்கு முதலில், இடையில், இறுதியில் வரும் எழுத்துக்கள் பற்றியும் மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராத எழுத்துக்கள் பற்றியும் விளக்குகிறது. இச்செய்திகளே அறிவியல், தொழில்நுட்பம் என்ற பொருண்மையின் கீழ் அமைந்துள்ள செய்தியாகும்.

செய்யுள் : 1. அறிவியல் ஆத்திச்சூடி


ஆத்திசூடி என்பது அகர வரிசையில் தொடங்கி ஒளகார வரிசையில் முடியக்கூடிய அறிவுரைகளை எடுத்துக்கூறும் இலக்கியமாகும். நமது பாடப்பகுதியான அறிவியல் ஆத்திசூடியை எழுதியவர் நெல்லை சு.முத்து. இவர் தற்போது வளர்ந்துவரும் அறிவியல் பற்றி மாணவர்களுக்கு இப்பாடல் மூலம் கூறுகிறார். அறிவியல் மீது ஆர்வம் கொள்ளவும், ஆய்வில் மூழ்கி கவனமாக படித்து, உன்னால் இயன்றவரை புரிந்து கொண்டு, ழுமு ஈடுபாட்டுடன் அதில் இறங்கி, உண்மைகள் பலவற்றை கண்டறிந்தால், ஊக்கம் எனும் உனது முயற்சியே உனக்கு வெற்றியை கொடுக்கும். என்றைக்கும் அறிவியலே வெற்றி பெறும். ஏன் என்று கேன்விகள் கேள். ஐயத்தை தெளிந்து விளக்கமாக கூறு. ஒற்றுமையுடன் செயலை செய். ஓய்வு இல்லாமல் உழைக்க பழகு. ஒளடதம் போல் அனுபவங்களை பெற்றுக்கொள் எனும் அறிவியல் பற்றிய செய்திகளை இச்செய்யுள் பகுதி விளக்குகிறது.


செய்யுள் : 2. அறிவியலால் ஆள்வோம்


அறிவியல் வளர்ச்சியால் இந்த உலகை ஆள்வதை குறித்து இச்செய்யுள் பகுதி விளக்குகிறது. மனிதன் ஆழ்கடலில் சென்று ஆய்வு செய்கின்றான். நிலவிலும் சென்று வாழ நினைக்கிறான். செயற்கைகோள் உதவியுடன் செய்தி தொடர்பில் சிறந்து விளங்குகின்றான். புயல், மழை போன்றவற்றை கண்டறிகின்றான். எலும்பும் சதையும் இல்லாத எந்திர மனிதனையும் படைக்கின்றன். உலகத்தையே உள்ளங்கைக்குள் இணையத்தின் மூலம் கொடுக்கின்றான். உடலுறுப்பு மாற்றம் செய்து உயிரைக் காக்கின்றான். அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து தனது எல்லா தேவைகளையும் நிறைவேற்றுகின்றான். நாளைய மனிதர்கள் விண்ணிலுள்ள கோல்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து அதில் வாழ்ந்து, சென்று வருவதற்கு பாதையும் அமைத்திடுவான் என்று எதிர்கால அறிவியல் வளர்ச்சியை பற்றி ‘அறிவியலால் ஆள்வோம்’ என்னும் இச்செய்யுள் பகுதி விளக்குகிறது. 

உரைநடை : கணியனின் நண்பன் 


கணியன் தனது வீட்டின் அழைப்பு மணியை அழுத்திய போது வீட்டில் புதிய குரல் கேட்டது. அதை யோசித்து கொண்டிருந்த போதே உள்ளிருந்து ஒரு உருவம் கதவை திறந்தது. அதை கண்டு வியப்படைந்து தனது அம்மாவிடம் அதை பற்றி கேட்க தொடங்கினான். கணியனிடம் அந்த எந்திரம் வீட்டிற்கு எப்படி வந்தது என்பதை பற்றியும், அதன் வேலைகள் பற்றியும் அவன் அம்மா கூறினாள். கணியன் எந்திர மனிதனுடன் பேச தொடங்கினான் அதுவும்; பேசியது. ரோபோ என்ற பெயர் எப்படி உருவானது என்ற வரலாற்றை முதலில் சொல்லியது. தானியங்கி என்றால் என்ன, தானியங்கிக்கும், எந்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாது என்பதை பற்றியும் கணினி மூலம் விளக்கியது. இவற்றின் பயன்பாடு குறித்தும் கூறியது. சோபியா என்ற ரோபோவிற்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது பற்றியும் எந்திரம் தான் உருவான வரலாற்றையும், பயன்பாட்டையும் குறித்து கணியனிடம் உரையாடும் வகையில் இந்த உரைநடைப் பகுதி அமைந்துள்ளது.

துணைப்பாடம் : ஒளி பிறந்தது (அப்துல் கலாமுடன் நேர்க்காணல்)


ஒரு தொழில் நுட்ப கண்காட்சியில் மாணவர்கள் தங்;களது கேள்விகளை அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டு உரையாடும் வகையில் இந்த துணைப்பாடப்பகுதி அமைந்துள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் உதவியால் கலாம் ஐயா மாணவர்களின் வினாக்களுக்கு விடையளிக்கிறார். மாணவர்கள்  அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட காரணமான நிகழ்வு எது? உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது? நீங்கள் பெரிதும் மகிழ்ந்த நிகழ்வு யாது? என அவரைப் பற்றிய கேள்வியை முதலில் கேட்கின்றனர். பிறகு சுதந்திர இந்தியாவின் வெற்றியாக எவற்றை கருதுகிறீர்கள்? மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க என்ன மாதிரியான ஆய்வுகள் நடைபெறுகின்றன? நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கும்? என தமது நாட்டை பற்றி செய்திகளை கேட்கின்றனர். செவ்வாய் கோளில் மனிதன் வாழ முடியுமா? நிலவிற்கு செல்லலாம் என்றால் சூரியனுக்கும் கூட செல்லலாமா? என்று விண்வெளி பற்றிய கேள்வியை வைக்கின்றனர். உலகின் முதல் விஞ்ஞானியாக யாரைக் கூறலாம்? வளரும் இந்தியாவிற்கு எங்கள் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? வெற்றியை அடையும் வழி எது? என்று எதிர்காலம் குறித்த கேள்விகளை கேட்கின்றனர். கலாம் ஐயா அதற்கு பதிலளிக்கிறார். இச்செய்திகளே இத்துணைப்பாட பகுதியில் உள்ளது.

இலக்கணம் : மொழி முதல், இறுதி எழுத்துக்கள் 


மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மொழிக்கு இடையில் வரும் எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் பற்றியும், மொழிக்கு முதலில் வராத எழுத்துகள், மொழிக்கு இறுதியாகா எழுத்துகள் பற்றியும் மொழி முதல், இறுதி எழுத்துகள் என்னும் இலக்கணப் பகுதியில் பாடமாக அமைந்துள்ளது. 


- WTS Teachers team
Full View

பருவம் - 2 இயல் - 1 கண்ணெனத் தகும்

கண்ணெனத் தகும்

இவ்வியலின் பொருண்மையானது கல்வி என்பது கண்களுக்கு இணையானது என கல்வியின் சிறப்பை கூறுவதாகும். ‘மூதுரை’ எனும் செய்யுளானது நாட்டை ஆளும் மன்னனையும், குற்றமில்லாத கல்வி கற்றவனையும் ஒப்பிட்டு கற்றவனின் சிறப்பை கூறும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நூலை கற்றதோடு மட்டும் நில்லாமல் அதன் கருத்தை தம் வாழ்வோடு பயன்படுத்தி வாழ வேண்டும் என ‘துன்பம் வெல்லும் கல்வி’ எனும் செய்யுள் பகுதி கூறுகிறது. மாணவர்களின் நலனுக்காக கல்வி பணி செய்த கர்மவீரர் காமராசர் பற்றி ‘கல்வி கண் திறந்தவர்’ என்ற உரைநடைப்பகுதி விளக்குகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஆறாம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர் களப்பயணமாக அழைத்துச் சென்று நூலகத்தின் சிறப்பையும், நூல்களின் பயனையும் விளக்கும் வகையில் ‘நூலகம் நோக்கி’ எனும் இந்த விரிவானப் பகுதி அமைகிறது. எழுத்துக்கள் ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றுள் ஒற்றுமை ஏற்படும். இதுவே ‘இன எழுத்து’ ஆகும். மெய் எழுத்துக்களையும், உயிர் எழுத்துக்களையும் தொடர்ந்து எந்த எழுத்துக்கள் இன எழுத்தாக வரும் என்பதையே இந்த இலக்கணப் பகுதி விளக்குகிறது. கல்வியின் சிறப்பு குறித்தே இவ்வியல் விவரிக்கிறது.

செய்யுள் : 1. மூதுரை


  இது ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துக்களை கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என அழைக்கப்படுகிறது. கடவுள் வாழ்த்து பாடல் ‘வாக்குண்டாம்’ எனத் தொடங்கப்படுவதால் வாக்குண்டாம் என்ற பெயரும் பெறுகிறது.  இந்நூலில் 31 வெண்பா பாடல்கள் உள்ளன. மூதுரை என்பதற்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். நாட்டை ஆட்சி செய்யும் மன்னனையும், உலக அறிவை கல்வியாக கற்றவனையும் ஒப்பிட்டு இப்பாடல் அமைகிறது. மன்னனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிடைக்கும். ஆனால் குற்றமில்லாமல் கல்வி கற்றவனுக்கோ அவன் செல்லும் இடங்கலெல்லாம் சிறப்பு பெறுவார் என்கிறார் ஒளவையார். சிறந்த அறிவுரைகளை கூறி, கற்றவனுக்கான சிறப்பை கூறும் வகையில் இச்செய்யுள் பகுதி அமைந்துள்ளது.


செய்யுள் : 2. துன்பம் வெல்லும் கல்வி 


  நாம் ஒரு நூலை கற்றதோடு இருந்து விடாமல், அதன் பயனை மறந்து விடாமல் நம் வாழ்க்கையில் அதை கடைபிடிக்க வேண்டும். நாட்டின் நெறி தவறியும், நல்லவர் குறை செல்லும்படியும் நடக்க கூடாது. பெரியோரின் அறிவுரைகளை மீறாமலும், பிறரிடம் பழகும் முறையிலும், பேசும் முறையிலும், பண்பு நெறி மாறாமலும் இருக்க வேண்டும். பிறர் உழைப்பை நம்பி வாழ கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினை கற்று, சோம்பலை போக்க வேண்டும். பிறருடன் வம்பு செய்யும் வழக்கத்தை விட வேண்டும். வானம் தொடும் அளவிற்கு அறிவை வளர்த்து கொண்டு மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரையின்படி வாழ்ந்து வெற்றியையும், விருதுகளையும், பெருமையையும் பெற வேண்டும். பெற்ற தாயின் புகழும் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும் என்றும், நாம் பெற்ற கல்வியை நம் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பது பற்றி இச்செய்யுள் பகுதி விளக்குகிறது.


உடைநடை : கல்வி கண் திறந்தவர் 


  கல்வி கண் திறந்தவர் என பெரியாரால் பாராட்ட பெற்றவர் தான் நம் காமராசர். ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக் கூடம் செல்ல வழி செய்து, படிப்பறிவு இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும் எனக் கூறி ஒரு மைல் தூரத்தில் ஆரம்ப பள்ளியும், மூன்று மைல் தூரத்தில்; நடுநிலைப்பள்ளியும், ஐந்துமைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளியும் ஆரம்பித்தார். பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேலை உணவாவது வழங்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். கல்வித்துறை விதிகளை மாற்றி, மாணவர்களின் நலனுக்காக அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிக் கூடங்களை திறக்க செய்தார். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி அதை நடைமுறை படுத்தினார். ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார். மாணவர்களின் உயர்கல்விக்காக பல கல்லூரிகளையும், பயிற்சி நிறுவயங்களையும் உருவாக்கினார். தமிழ் நாட்டில் பல கிளை நூலகங்களை தொடங்கினார். இவ்வாறு கல்விக்காக அவர் செய்த செய்த பணிகளை எண்ணியே கல்வி கண் திறந்தவர் எனும் இந்த உரைநடைப் பகுதி கூறுகிறது.
 

விரிவானம்: நூலகம் நோக்கி 


  முன்னால் தமிழக முதலமைச்சர் சி.என்.அண்ணாத்துரையின் 102-வது பிறந்த நாள் 2010 செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று அன்றைய முதலமைச்சர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒரு நாள் களப்பயணமாகச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்து செல்கின்றன. அந்த நூலகத்தின் சிறப்பு பற்றி ஆசிரியர் மாணவர்களிடம் எடுத்து கூறுகிறார். எட்டு ஏக்கர் பரப்பளவில் எட்டு அடுக்குகளை கொண்டது. நூலகத்திற்கான விதிகளை உருவாக்கிய நூலகத்தின் தந்தை என்றழைக்கப்படும் இரா.அரங்கநாதன் பற்றி கூறுகிறார். தரைத்தளத்தில் பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான ‘பிரெய்லி’ நூல்கள் உள்ளன. அதை கேட்டறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவிலும், உதவி செய்ய பணியாளர்களும் உள்ளன. முதல் தளத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிக்க செயற்கை மரம் ஒன்றை கொண்டு குழந்தைகளுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒவ்வொன்றாக கூறி ஏழாம் தளத்தை அடைந்தனர். பழமையான ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு அத்துடன் வரலாறு, புவியியல், சுற்றுலா நூல்கள், போட்டித் தேர்வுக்கு தேவையான நூல்களும், மின் நூலகமும் உள்ளது. அதுமட்டுமின்றி கூட்ட அரங்கு, கலையரங்கு, கருத்தரங்க கூடம், கண்காட்சி அரங்கு போன்றவையும் உள்ளன. மாணவர்களிடம் நூலகத்தின் சிறப்பினை எடுத்துரைத்து, அதன் பயன்பாட்டையும் விளக்கும் வகையில் இந்த உரைநடைப்பகுதி அமைந்துள்ளது.  
 

இலக்கணம் : இன எழுத்துக்கள் 


  எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் போன்றவற்றுள் ஒற்றுமை உண்டு. இந்த ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும். ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துக்களும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்தே பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். மெய் எழுத்துக்களை போலவே உயிரெழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உள்ளன. குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும் இன எழுத்துக்கள் ஆகும். இவ்வாறு மெய் எழுத்திற்கும், உயிர் எழுத்திற்கும் அடுத்து என்னென்ன எழுத்துக்கள் வரும் என்பதை இன எழுத்துக்கள் எனும் இலக்கணப்பகுதி எடுத்துரைக்கிறது. 

- WTS Teachers team
Full View

பருவம் - 3 இயல் - 1 புதுமைகள் செய்யும் தேசமிது


புதுமைகள் செய்யும் தேசமிது


 “புதுமைகள் செய்யும் தேசமிது” எனும் இத்தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட பகுதிகளானது இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு பற்றியே கூறுகிறது. “பாரதம் அன்றைய நாற்றங்கால்” என்ற செய்யுளானது இந்திய நாட்டின் சிறப்புகளை பற்றி கூறும் வகையில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டில் காந்தி” என்ற உரைநடைப் பகுதியானது வாழ்வில் எளிமையின் சிறப்பை பற்றியும், சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது. “வேலுநாச்சியர்” எனும் விரிவானப் பகுதியானது இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை பற்றி அறிந்து போற்றும் வகையில் அமைந்துள்ளது. “நால்வகைச் சொற்கள்” எனும் இலக்கணப் பகுதியானது சொல்லின் நான்கு வகைகளைப் பற்றி அதாவது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் மற்றும் உரிச்சொல் என்பது பற்றி விளக்குகிறது. 

செய்யுள் : 1. பாரதம் அன்றைய நாற்றங்கால்


    வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகிற்கே வழிகாட்டியாய் இருக்கும் நம் பாரத நாட்டின் ஒருமைப்பாட்டை போற்றுகிறார் கவிஞர் தாராபாரதி. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் இந்தியா பல புதுமைகளைக் கொண்டது. தாய் நாட்டுக்கு திருக்குறள் ஆடையாகவும், மெய்யுணர்வு மேலாடையாகவும் விளங்குகிறது. காளிதாசனின் கவிதை வரிகள் காவிரி கரை வரை எதிரொலிக்க, கம்பனின் அமுதம் போன்ற வரிகளுக்கு கங்கையின் அலைகள் இசை அமைக்கின்றன. குமரி முனை என்ற கன்னிப் பெண்ணின் கூந்தலுக்கு காஷ்மீர் மலர்கள் மாலையாகின்றன. புல்வெளி எல்லாம் பூக்கள் பூத்து புன்னகைக்கின்றன. அமுத சுரபியாக திகழும் நம் நாடு அன்னிய நாட்டு மக்களின் பசியை தீர்க்கின்றன. அறத்தின் ஊன்று கோலாக மகாத்மா காந்தியின் அகிம்சை எனும் சிறிய கைத்தடி விளங்குகிறது என்பது பற்றி செய்;திகளை பாரதம் அன்றைய நாற்றங்கால் என்ற தலைப்பில் ஆசிரியர் பாடியுள்ளார்.

உரைநடை : தமிழ்நாட்டில் காந்தி 


தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்தியடிகள் பலமுறை தமிழ்நாட்டிக்கு வருகை தந்துள்ளார். அவர் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான சம்பவங்கள் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றன. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு புகை வண்டியில் பயணிக்கும் போது வயலில் வேலை செய்யும் ஏழைகள் இடுப்பில் ஒரு துண்டை மட்டுமே உடுத்தியிருப்பதை கண்டு வருந்தினார். நாட்டில் பெரும்பாலான மக்கள் அரைகுறை உடை உடுத்தி இருக்கும்போது தனக்கு உடை தேவையா? என சிந்தித்த அவர் அன்று முதல் வேட்டியும் தோளில் ஒரு துண்டும் மட்டுமே அணிவதை வழக்கமாகக் கொண்டார். உலகமே வியந்த அவரது எளிமைக்கோலம் தமிழ் நாட்டில் ஆரம்பித்துதான். அதே போல மதுரைக்கு வந்த போது அனைத்து சாதி மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் போதுதான் தானும் உள்ளே வருவேன் என்றார். பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் நினைத்தது நடந்தது. அனைத்து மக்களுடனும் கோவிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தார். 1937-ல் சென்னையில் நடந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்ட காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழை கற்கத் தொடங்கியதாகவும், ஜி.யு. போப் எழுதிய தமிழ் கையேடு தன்னை கவர்ந்தாகவும், தனக்கு பிடித்த தமிழ் நூல் திருக்குறள் என்றும் கூறினார். இவையே தமிழ்நாட்டில் காந்தி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளவையாகும். 

துணைப்பாடம் : வேலுநாச்சியார்


வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் மெல்ல நம் நாட்டை கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அவர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் பலர். ஆண்களுக்கு சமமாக பெண்களும் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராமநாதபுரத்து மன்னர் செல்லமுத்துவின் ஒரே மகளான வேலுநாச்சியார். ஆங்கிலேயருக்கு எதிரான போரில் அவரது கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்படுகிறார். வெள்ளையர்கள் சிவகங்கையை கைப்பற்றுகின்றனர். காலம் கனியும் வரை காத்திருந்த வேலு நாச்சியார் சிவகங்கை கோட்டையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி படை திரட்டினார். பெரிய மருது, சின்ன மருது போன்ற குறுநில மன்னர்களும் அவருக்கு துணையாக வந்தனர். வேலுநாச்சியாருக்கு உருதுமொழியும் தெரியும் என்பதால் மைசூர் சென்று ஐதர் அலியை சந்தித்து குதிரைப்படையை தந்து உதவும்படி கேட்க, அவரும் ஐயாயிரம் குதிரைப் படை வீரர்களை அனுப்பி வைத்தார். தன் கணவர் கொல்லப்பட்ட காளையார் கோயில் முதல் தாக்குதலை ஆரம்பிக்கிறார் வேலுநாச்சியார். வெள்ளையர்கள் தோற்று ஓட காளையார் கோயில் மீட்கப்படுகிறது. அடுத்து விஜயதசமி நாளில் சிவகங்கை கோட்டையை கைப்பற்ற திட்டமிடுகிறார். பெண்கள் படைக்கு தலைமை தாங்கிய குயிலி என்ற பெண்ணின் தியாகத்தால் வெள்ளையரின் ஆயுதக் கிடங்கு வெடித்து சிதற, தோற்று ஓடுகின்றனர். எட்டு ஆண்டுகளுக்குப்பின் சிவகங்கை கோட்டை வேலுநாச்சியார் வசம் வந்தது. ஜான்சி ராணிக்கு முன்பே விடுதலைப் போரில் ஈடுபட்டவர் என்ற சிறப்பும் வேலுநாச்சியாருக்கு உண்டு என வீரமங்கையான இவரைப் பற்றிய செய்திகளை கூறுகின்றனர். 

இலக்கணம் : நால்வகைச் சொற்கள்


தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும். அவை நான்கு வகைப்படும் அவை, ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல், ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல், பெயர்ச் சொல்லையும், வினைச் சொல்லையும் சார்ந்து வருவது இடைச்சொல். இது தனித்து இயங்காது. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் என நால்வகை சொற்களை பற்றி விவரிக்கிறது.  

- WTS Teachers team
Full View

பருவம் - 3 இயல் - 2 எல்லாரும் இன்புற

எல்லாரும் இன்புற


இந்த இரண்டாம் இயலில் எல்லோரும் இன்புற என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பராபரக் கண்ணி செய்யுளானது இவ்வுலகில் அனைவரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்ற கருத்தை தாயுமானவர் இச்செய்யுளில் கூறுகிறார். வாழ்க்கையில் உயர்சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் குறிக்கோளை எளிதாக அடைய முடியும் என்று நீங்கள் நல்லவர் என்ற செய்யுள் கூறுகிறது. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே சிறந்த அறமாகும் என பசிப்பிணி போக்கிய பாவை உரைநடை நாடகம் கூறுகிறது. ஏழ்மையிலும் நேர்மை முக்கியம் என்பதேயே பாதம் என்னும் துணைப்பாடம் நமக்கு விளக்குகிறது. இலக்கணப்பகுதியில் பெயர்ச்சொல்லின் ஆறு வகைகள் மற்றும் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன. திருக்குறளில் அறன் வலியுறுத்தல், ஈகை, இன்னா செய்யாமை, கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை போன்ற அதிகாரங்களில் சில குறள்கள் மட்டுமே பாடமாக கொடுக்கப்பட்டுள்ளன. வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துக்களை திருக்குறள் எனும் இச்செய்யுள் பகுதி கூறுகிறது. இவையே எல்லோரும் இன்புற எனும் பொருண்மையில் அமைந்துள்ள தலைப்புகள் ஆகும். 

செய்யுள் : 1. பராபரக் கண்ணி 


எல்லா உயிர்களையும் தம் உயிர்போல நினைக்கும் கருணை மிக்க சான்றோருக்குத் தொண்டு செய்ய வேண்டும். அப்படி செய்பவனாக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும். இவ்வுலகில் எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

செய்யுள் : 2. நீங்கள் நல்லவர்


வாழ்வின் பொருளை ஆராயும் ஒரு தனிமனிதனின் சிந்தனை ஒரு கவிஞனின் பார்வையில் வாழ்க்கை எப்போதுமே பின்னோக்கி போவதில்லை. நேற்றைய பொழுதுடன் ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது. உழைக்கும் போது நீங்கள் ஒரு புல்லாங்குழல் போல ஆகிவிடுகிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் நன்மையை பற்றித்தான் நான் பேச முடியும். என்னைப் போல் இரு. உன்னிடம் இருப்பதை எல்லாம் முழுசாய்க் கொடு என கனி வேரைப்பார்த்து சொல்லாது. கொடுப்பது கனியின் இயல்பு. பெறுவது வேரின் இயல்பு. உறுதியாகக் கால் பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கும் போது  நீங்கள் நல்லவர்.

உரைநடை : பசிப்பிணி போக்கிய பாவை


கோவலன் மாதவி ஆகியோரின் மகளான மணிமேகலை என்பவளை மணிமேகலா தெய்வம் மணிபல்லவம் எனும் தீவில் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த தீவில் இருக்கும் புத்த பீடிகையை காவல் காக்கும் தீவதிலகை என்ற பெண்ணைச் சந்திக்கிறார். அந்தத் தீவிலிருக்கும் கோமுகி எனும் பொய்கையை பற்றியும் வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி எனும் அரிய பாத்திரம் பொய்கை மேல் தோன்றும் என்பதையும் கூறுகிறாள். அந்த அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்க குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவளிக்கலாம் என்று கூறி மணிமேகலை வியப்படைகிறாள். இன்றுதான் வைகாசி மாத முழு நிலவு தோன்றும் நாள் எனும் போதே பொய்கையின் மேல் அமுதசுரபி தோன்றும் நாள் எனும் போதே பொய்கையின் மேல் அமுதசுரபி தோன்ற மணிமேகலை அதை எடுக்கிறாள். இவ்வுலக உயிர்களுக்கு பசி இல்லாமல் உணவளிப்பாயாக என தீவதிகை அவளை ஆசிர்வதித்து அனுப்புகிறாள். மணிமேகலை ஆதிரை எனும் பெண்ணை சந்தித்து தான் அமுதசுரபி பெற்ற கதையை கூறி அதில் உணவிடும்படி கேட்கிறாள். ஆதிரையும் உணவு விட, அதைக் கொண்டு பசித்தவர் எல்லோருக்கும் உணவளிக்கிறாள். பூம்புகாரில் உள்ள சிறைக் கைதிகளுக்கும் உணவளிக்கிறாள். அத்தோடு மன்னரிடம் பேசி சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாகவும் மாற்றுகிறாள்.

துணைப்பாடம் : பாதம் 


ஒரு மழை நாளில் போது சிறுமி ஒருத்தி ஒற்றைச் செருப்பை தைக்கக் கொடுத்து விட்டுச் செல்கிறாள். இளஞ்சிவப்பு நிறத்தில் வெல்வெட் துணி வைத்து அழகாகத் தாயாரிக்கப்பட்டிருந்தது. சிறுமி செருப்பை கேட்டு வராததால் அவளுக்காக காத்திருப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாள் தற்செயலாக மாரியின் மனைவி அந்த ஒற்றைச் செருப்பை அணிந்து பார்க்க அவள் பாதத்துக்கு பொருத்தாமாக இருப்பதை கண்டு ஆச்சரியமடைகிறார். இரு வேறு அளவு கொண்ட பாதங்களுக்கு ஒரே காலணி பொருந்தும் அதிசயத்தை மாரி;யிடம் பகிர்ந்து கொள்ள விஷயம் ஊருக்குள் பரவி அதியக் காலணியைக் பார்க்க மக்கள் கூட்டமாய் வருகின்றனர். அதை அணிந்து பார்க்க அவர்கள் பணமும் தருகின்றனர். தினமும் பணம் சேர்த்து மாரி சொந்தமாக வீடு கட்;டி வசதியான நிலைக்கு செல்கிறார். மாரி அந்த சிறுமிக்காக காத்திருக்கிறார். ஒரு நாள் திருடர்கள் மாரியை தாக்கி காலணியை திருட முயற்சிக்கின்றனர். யாரோ அவரைக் காப்பாற்றுகின்றனர். திடீரேன ஒருநாள் அந்தச் சிறுமி அவரைத் தேடி வருகிறாள் வளர்ந்து நடுத்தர வயதில் இருக்கிறாள். அவளைப் பற்றி விசாரிக்க பதில் சொல்லாமல் சிரித்தபடி சென்று விடுகிறாள். தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவள் இரு காலணியை அணிய முயற்சிப்பதை மாரி பார்க்கிறார். அவர் தைத்து கொடுத்த காலணி அவள் காலுக்கு பொருந்தவில்லை.

இலக்கணம் : பெயர்ச்சொல்


ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். அது ஆறுவகைப்படும் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப் பெயர், தொழிற்பெயர் என்பனபவாகும்.
நம் முன்னோர்கள் சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்;டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் எனப்பட்டன. இதிலும் இடுகுறி பொதுப்;பெயர், இடுகுறி சிறப்புபெயர் இரு வகை உண்டு. இதனைப் போலவே காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் இதிலும் காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்பு பெயர் இரு வகையுண்டு.


திருக்குறள்


எல்லாக் கால கட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய வாழ்க்கை நெறிகளை தெளிவாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் தான் நம் திருவள்ளுவர். உலகப் பொதுமறை, வாயுரை வாழ்த்து என பல சிறப்புப் பெயர்களைக் கொண்டத் திருக்குறளை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை எடுத்துரைக்கிறார். தம்மிடம் உள்ள பொருளை இல்லாதவருக்கு வழங்க வேண்டும் என்று ஈகை என்னும் அதிகாரத்தில் கூறுகிறார்.
நமக்கு தீமை செய்தவருக்கும் நாம் நன்மை செய்ய வேண்;டும் என்னும் கருத்தை இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். பகிர்ந்து வாழவேண்டும் என கொல்லாமை அதிகாரத்திலும் பெரியோரை கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று பெரியாரைப் பிழையாமை அதிகாரத்திலும் கூறுகிறார்.
 

- WTS Teachers team
6th Tamil - இயல் - 8 - புத்தக வினாவிடைகள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 8 - அலகுத்தேர்வு - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 8 - விரைவு குறியீட்டு வினாக்கள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 7 - புத்தக வினாவிடைகள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 7 - அலகுத்தேர்வு - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 7 - விரைவு குறியீட்டு வினாக்கள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 4 - புத்தக வினாவிடைகள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 4 - அலகுத்தேர்வு - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 4 - விரைவு குறியீட்டு வினாக்கள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 3 - புத்தக வினாவிடைகள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 3 - அலகுத்தேர்வு - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 3 - விரைவு குறியீட்டு வினாக்கள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 2 - புத்தக வினாவிடைகள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 2 - அலகுத்தேர்வு - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 2 - விரைவு குறியீட்டு வினாக்கள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் - 1 - புத்தக வினாவிடைகள் - WTS Teachers teampdf
6th Tamil - இயல் -1 - அலகுத்தேர்வு - WTS Teachers teampdf
6th Tamil - இயல் -1 - விரைவு குறியீட்டு வினாக்கள் - WTS Teachers teampdf
Recent Question Papers & Keys

Comments