Videos

Full View
cruds.institution.fields.id
Full View

பருவம் - 1 இயல் - 2 இயற்கை இன்பம்

இயற்கை இன்பம்

இந்த இரண்டாம் இயலில் இயற்கை இன்பம் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சிலப்பதிகாரச்  செய்யுளானது இயற்கைக்கு சோழ மன்னனின் சிறப்பை ஒப்பிட்டு நிலவு, சூரியன், மழை போன்றவற்றை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. “பாரதியார் கவிதைகள்” எனும் தலைப்பின்கீழ் அமைந்த “காணி நிலம்” என்ற செய்யுள் பகுதி பாரதியாரின் கனவு இல்லத்தை பற்றி கூறுகிறது. பறவைகள் இடம் பெயர்தலையும், சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணங்களையும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் “சிறகின் ஓசை” எனும் உரைநடைப் பகுதி விளக்குகிறது. மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் முயற்சியைப் பற்றியே இக்கதை அமைகிறது. கடலில் தனது முயற்சியால் மீனுடன் போராடிய கிழவன் இறுதியில் தனது முயற்சியின் பலனை அடைந்தார? இல்லையா? என்பதை “கிழவனும் கடலும்” என்ற துணைப்பாடப்பகுதி விளக்குகிறது. எழுத்துக்களை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாக பிரித்து அவற்றின் வகைகளை பற்றி கூறுவதே “முதலெழுத்தும் சார்பெழுத்தும்” எனும் இலக்கணப் பகுதியாகும். திருக்குறளில் அறத்துப்பால் எனும் பெரும் பிரிவின் கீழ் அமைந்த கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, மக்கட்பேறு, அன்புடைமை, இனியவை கூறல் போன்ற அதிகாரங்களில் சில குறள்கள் மட்டுமே பாடமாக கொடுக்கப்பட்டுள்ளன. வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துக்களை “திருக்குறள்” எனும் இச்செய்யுள் பகுதி கூறுகிறது. இவையே இயற்கை இன்பம் எனும் பொருண்மையில் அமைந்துள்ள தலைப்புகள் ஆகும். 

செய்யுள் : 1. சிலப்பதிகாரம்


சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் எனும் கருத்து உள்ளது. ஆனாலும் தனது சிலப்பதிகார நூலில் சோழ மன்னனின் சிறப்பை ஒப்பிட்டு இயற்கையை வாழ்த்துகிறார். ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை குளிர்ச்சியுடையதைப் போல வெண்மையான நிலவும் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. காவிரி ஆறு பாயக் கூடிய வளம் கொழிந்த நாட்டை ஆட்சி செய்யக் கூடிய சோழ மன்னனின் ஆணைச் சக்கரம் போல சிகரம் போன்றுள்ள இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது சூரியன். கடலை எல்லையாக உடைய உலகிற்கு மன்னன் அருள் செய்வது போல மழையானது வானிலிருந்து பொழிந்து மக்களுக்கு அருள் செய்கிறது. எனவே வெண்ணிலவையும், கதிரவனையும், மழையையும் போற்ற வேண்டும் என இயற்கையை வாழ்த்துவதாக இச்செய்யுள் பகுதி அமைந்துள்ளது.

செய்யுள் : 2. காணி நிலம்


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதி. விடுதலை உணர்வை மக்கள் மனதில் விதைக்கவும், பெண் உரிமைக்காகவும் இவர் எழுதிய பாடல்கள் பலவாகும். அதுமட்டுமின்றி மண் உரிமைக்காகவும் பாடல்கள் இயற்றியுள்ளார். தனது வீடானது தனக்குரிய நிலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை ‘பாரதியார் கவிதைகள்’ எனும் தொகுப்பில் “காணி நிலம்” என்ற தலைப்பில் பாடியுள்ளார். காணி அளவு நிலத்தில் அழகான தூண்களும், தூய மாடங்களையும் கொண்ட ஒரு மாளிகை இருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும், இளநீரைத் தரும் தென்னை மரங்களும் இருக்க வேண்டும். நிலவின் ஒளி வீச வேண்டும். குயில் குரல் கேட்க வேண்டும். இளந்தென்றல் காற்று வர வேண்டும் என பாரதி தனது கனவு இல்லத்தைப் பற்றி காணி நிலம் எனும் இச்செய்யுள் பகுதியில் பாடியுள்ளார்.

உரைநடை : சிறகின் ஓசை


பறவைகளின் தற்போதைய நிலைப் பற்றியே இந்த உரைநடைப் பகுதி பேசுகிறது. மனிதர்களைப் போலவே பறவைகளும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் தம் சொந்த இடத்;தை அடைவதையும், அவ்வாறு இடம் பெயர்தலை ‘வலசை போதல்’ என்றும் கூறுகின்றனர். 1500 ஆண்டுகளுக்கு முன்பே சத்திமுத்தப் புலவர் தம் பாடலில் “வலசை போதல்” பற்றிய செய்தியை பாடியுள்ளார். உணவு, இருப்பிடம், தட்ப வெப்பநிலை மாற்றம், இனபெருக்கம் போன்றவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. ‘வலசை’ போகும் போது பறவைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், தற்போது அழிந்து வரக் கூடிய பறவை இனமான சிட்டுக்குருவி பற்றியும், அது அழிவதற்கான காரணம் பற்றியும், அதை காப்பாற்ற மேற்கொள்ளக் கூடிய வழிமுறையையும் கூறுகிறது. பாரதியார் மற்றும் சலீம் அலியைப் போல காக்கை குருவி நமது சாதி என்பதை அறிந்து பறவைகள் இல்லாத உலகில் நம்மால் வாழ முடியாது என்பதை உணர்ந்து இயற்கையைப் போற்றி பறவைகளை காக்க வேண்டும் எள்பதை இந்த உரைநடைப் பகுதி விளக்குகிறது. 


துணைப்பாடம் : கிழவனும் கடலும்


மனிதன் இயற்கையோடு போரடிக்கொண்டே இருக்கிறான். அந்தப் போராட்டமே அவன் வாழ்வை அமைக்கிறது. “கிழவனும் கடலும்” எனும் இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. இவர் ஒரு மீனவர். இவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று மீன் பிடிக்காமல் ஒரு நாள் கூட திரும்பியதில்லை. மனோலின் எனும் சிறுவனை மீன் பிடிக்க கற்றுக் கொள்வதற்காக அவனது பெற்றோர் சாண்டியாகோ உடன் கடலுக்கு அனுப்புகின்றனர். முதல் நாற்பது நாளில் ஒரு மீன் கூட கிடைக்காததால் அவனுடைய பெற்றோர் அவனை வேறு படகிற்கு அனுப்புகின்றனர். பிறகு அவர் மட்டும் மீன் பிடிக்க செல்கிறார். அன்று எண்பத்து ஐந்தாவது நாள.; இன்று கண்டிப்பாக மீனைப் பிடித்துவிட்டே கரைக்கு செல்ல வேண்டும் என்று சாண்டியாகோ கடலுக்குள் செல்கிறார். அன்றும் ஒரு மீன் கூட கிடைக்காத நிலையில் படகிலேயே இரவு தங்கிவிடுகிறார். 

அடுத்த நாள் பசியுடனும், சோர்வுடனும் இருந்த நண்பகல் வேலையில் ஏதோ ஒன்று தூண்டில் கயிறை இழுப்பதை கவனித்தார். மீன் தான் என்பதை உறுதி செய்துகொண்டு; தூண்டிலை வேகமகாக படகிற்கு இழுக்க முயற்சி செய்கிறார்;. முடியவில்லை. சோர்வுடன் இருந்த சாண்டிக்கோ எப்படியும் மீனைப் பிடித்தே தீருவேன் என்று பல போராட்டங்களுக்கு பிறகு அந்த மீனைக் கொன்று பிடிக்கிறார்;. படகை நோக்கி பல மீன்களும், சுறாக்களும் வருக்கின்றன. அனைத்துடனும் போராடி ஒரு வழியாக கரையை அடைகிறார். சுறாக்கள் தின்றது போக கடைசில் மீனின் தலையும் அதன் எலும்புகளும் தான் மிஞ்சியது. சாண்டியாகோவை பார்க்க மனோலின் வருகிறான். எவ்வளவு பெரிய மீன் அது ‘நீங்கள் பெரிய வீரன் தான் தாத்தா’ என்று கூறுகிறான். சாண்டியாகோ நடந்தவற்றை அவனிடம் வருத்தமாக கூறுகிறார். மனோலின் தாத்தா உங்கள் திறமையும், விடாமுயற்சியும் வென்றுவிட்டது. வெற்றி, தோல்வி என்பதை தவிர்த்து சாம் மேற்கொள்ளும் முயற்சி எவ்வளவு என்பதை மையமாக கொண்டே இத்துணைப்பாட பகுதி அமைந்துள்ளது.  

இலக்கணம் : முதலெழுத்தும் சார்பெழுத்தும்


எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும். முதலெழுத்து என்பது உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய் எழுத்துகள் பதினெட்டும் சேர்ந்த முப்பது எழுத்துக்களும் ‘முதல் எழுத்துக்கள்’ ஆகும். இது எழுத்து தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதல் காரணமாக உள்ளது. சார்பெழுத்து என்பது முதல் எழுத்தை சார்ந்து வருவது ஆகும். இது பத்து  வகைப்படும். அதில் முதல் இரண்டான உயிர்மெய் மற்றும் ஆய்தம் பற்றிய விளக்கங்கள் மட்டுமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இச்செய்திகளே முதலெழுத்தும் சார்பெழுத்தும் எனும் இலக்கணப்பகுதியில் அமைந்துள்ளது. 

திருக்குறள்


எல்லாக் கால கட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய வாழ்க்கை நெறிகளை தெளிவாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் தான் நம் திருவள்ளுவர். உலகப் பொதுமறை, வாயுரை வாழ்த்து என பல சிறப்புப் பெயர்களைக் கொண்டத் திருக்குறளை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். இவர் எழுதிய 1330 குறளில் பத்து குறள்கள் மட்டுமே பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் எல்லாவற்றிற்கும் தொடக்கம் கடவுளே என்பதை கூறுகிறார். வான் சிறப்பு எனும் அதிகாரத்தில் மழையின் சிறப்பை கூறுகிறார். நீத்தார் பெருமை என்பதில் செய்ய முடியாத ஒரு செயலை செய்பவரே பெரியவர் என்பதைப் பற்றி கூறுகிறார். மக்கட் பேறு எனும் அதிகாரத்தில் குழத்தை செல்வத்தின் இன்பத்தைப் பற்றி கூறுகிறார். அன்புடமை என்பதில் அன்பின் தன்மையையும், இனியவை கூறல் என்பதில் நல்ல சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதையும் கூறுகிறார். இவை அனைத்தும் அறத்துப்பால் எனும் பிரிவில் அமைந்துள்;ள அதிகாரங்கள் ஆகும். திருக்குறள் எனும் செய்யுள் பகுதியில் இச்செய்திகளே அமைந்துள்ளன. 

- WTS Teachers team
Recent Question Papers & Keys

Comments