Text Book Data - Full View

Full View

பத்தாம் வகுப்பு தமிழ்

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மொத்தம் 9 இயல்கள் உள்ளன. ஒவ்வொரு இயலும் முறையே கவிதைப்பேழை, உரைநடை, விரிவானம் (துணைப்பாடம்), கற்கண்டு (இலக்கணம்), கற்பவை கற்றப்பின், திறன் அறிவோம், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, நிற்க அதற்கு தக, அறிவை விரிவு செய் போன்ற தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலின் சுருக்கத்தையும் பின்வரும் பகுதிகளில் நாம் காணலாம்.   !

Full View

இயல் 1 - அமுதஊற்று

        பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘அன்னை மொழியே’ எனும் செய்யுள் பகுதியானது தமிழ் மொழியின் பெருமையும், செழுமையும் குறித்து விளக்குகிறது. தேவநேயப் பாவாணரின் ‘தமிழ்சொல் வளம்’ எனும் கட்டுரையின் சுருக்கம் நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் சொல் வளத்தை பயிர் வகை சொற்கள் மூலம் சிறப்பாக அறியாலாம் என்ற வகையில் உரைநடைப் பகுதியானது அமைகிறது. தமிழ்மொழியையும், கடலையும் ஒப்பிட்டு இரட்டுற மொழிகிறார் தமிழழகனார். இவையே ‘இரட்டுற மொழிதல்’ எனும் செய்யுள் பகுதி. சங்க காலப் புலவர் ஒருவரும் இன்றைய நவீன யுகத்தின் இணையமறிந்த தமிழன் ஒருவனும் கால இயந்திரத்தின் உதவியால் சந்தித்து உரையாடினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் வெளிப்பாடே ‘உரைநடையின் அணிநலன்கள்’ எனும் விரிவானப் பகுதி. இலக்கணப் பகுதியில் எழுத்து மற்றும் எழுத்தின் வகைகளும், சொல், மூவகை மொழிகள் மற்றும் தொழிற்பெயர் அதன் வகைகள் குறித்து விளக்கும் பகுதியாக ‘எழுத்து, சொல்’ எனும் இலக்கணப் பகுதி அமைகிறது. இவையே “அமுத ஊற்று” எனும் பொருண்மையின் கீழ் அமைந்த தலைப்புகள் ஆகும். 

செய்யுள் : அன்னை மொழியே!

       பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய கனிச்சாறு எனும் தொகுப்பிலிருந்து இரு வேறு தலைப்பில் உள்ள பாடல்கள் எழுத்தாளப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழியின் பெருமை குறித்து ஆசிரியர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். அழகு நிறைந்த செந்தமிழ், பழமையான மொழி, குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக பேரரசு, பாண்டிய மன்னனின் மகள் எனவும் திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை எனவும் கூறி பெருமைக்குரிய உன்னை தலை பணிந்து வாழ்த்துகிறோம் என்கிறார். இப்படிப்பட்ட பெருமைக்குரிய உன்னை நாங்கள் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குவோம் என்கிறார்.

உரைநடை : தமிழ் சொல் வளம்

               கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது நம் செந்தமிழ் மொழி. தேவநேயப் பாவாணரின் ‘சொல்லாய்வுக் கட்டுரைகள்’ நூலின் உள்ள ‘தமிழ்சொல் வளம்’ எனும் கட்டுரையின் சுருக்கம் நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சொல் வளத்தை பலத்துறைகளில் காணலாம். இங்கு பயிர் வகை சொற்கள் மட்டும் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அடிவகை, இலை வகை, கொழுந்து வகை, பூவின் நிலைகள், பிஞ்சு வகை, குலை வகை, கெட்டுப்போன காய்கனி வகை, பழத்தோல் வகை, மணி வகை, இளம் பயிர் வகை போன்றவை இங்கு பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

செய்யுள் : இரட்டுற மொழிதல்

                       ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனை சிலேடை என்றும் கூறுவர். தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் கற்பிக்கப்பட்டு, முதல், இடை, கடை என முச்சங்கங்களால் வளர்ந்தது. ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகவும், சங்கப் பலகையில் அமர்ந்திருந்த புலவர்களால் காக்கப்பட்டது. கடலானது முத்தையும், அமிழ்தினையும் தரும். வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்ச சன்யம் போன்ற மூன்று வகை சங்கையும், மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படியும், தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது என்று தமிழ்மொழியை கடலோடு ஒப்பிட்டு இரட்டுற மொழிகிறார் சந்தக்கவிமணி என புகழப்படும் தமிழழகனார்.

விரிவானம் : உரைநடையின் அணிநலன்கள்

                   எழில் முதல்வன் எழுதிய ‘புதிய உரைநடை’ எனும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கப் பகுதியே இந்த விரிவானம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் ஓலைச்சுவடியில் எழுதிக் கொண்டிருக்கும் புலவரைச் சந்திக்கும் இணையத்தமிழன் தன்னைப் பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டு, ஒரு மணி நேரம் மட்டுமே அவருடன் தங்கியிருக்க முடியும் என்ற நிலையைச் சொல்லி இலக்கியம் பற்றி பேச அழைக்கிறான். இன்றைய நவீன யுகத்தின் இணையமறிந்த தமிழன் ஒருவனும், சங்க காலப் புலவரும் ஒருவரும் கால இயந்திரத்தின் உதவியால் சந்தித்து உரையாடினால் எப்படியிருக்கும் என்ற கற்கனையின் வெளிப்பாடே இப்பகுதி.

இலக்கணம் : எழுத்து, சொல்

                          மொழியைத் தெரிவுறப் பேசவும், எழுதவும் மொழியின் சிறப்பியல்புகளை அறியவும், இலக்கணம் துணை செய்யும். எழுத்து பத்து வகைப்படும். ஆனால் இங்கு உயிரளபெடையும், ஒற்றளபெடையும் நமக்கு பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. செய்யுளில் மொழிக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்போது அதைக் குறிக்க நெட்டெழுத்துக்களின் இனமான குற்றெழுத்துக்கள் அவற்றின் பின்னால் வருவது ‘உயிரளபெடை’ ஆகும். செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை என்போம்.

              ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். அது இரு திணைகளையும், ஐந்து பால்களையும் குறிக்கும். மூவகை இடங்களிலும் வரும். உலக வழக்கினும், செய்யுள் வழக்கிலும் வரும். வெளிப்படையாகவும், குறிப்பாகவும் விளங்கும். தனிமொழி, தொடர் மொழி, பொது மொழி என மூன்று வகையாக அமையும். தொழிற் பெயர் மற்றும் அதன் வகைகளையும் விளக்கும் வகையில் இலக்கணப் பகுதியானது அமைகிறது.
 

- WTS Teachers Team
Full View

இயல் 2 - உயிரின் ஓசை

           காற்றின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றின் பல்வேறு வடிவங்கள் பற்றியும் “கேட்கிறதா குரல்” எனும் உரைநடைப் பகுதி விளக்குகிறது. உலக உயிர்களின் இயக்கம் காற்று இல்லாமல் இல்லை என்பதை விளக்கும் வகையில் பாரதியாரின் வசனகவிதையில் அமைந்த “காற்றே வா” எனும் செய்யுள் பகுதி விளக்குகிறது. முல்லை நிலத்து தலைவனை நினைத்து வருந்தும் தலைவியின் நிலை கண்டு நற்சொல் கேட்க வந்த முது பெண்டிர் ஒருவர் நற்சொல் கேட்டு தலைவியை ஆற்றுப்படுத்துவதாக அமைவதே “முல்லைப்பாட்டு” எனும் செய்யுள் பகுதி. புலம்பெயர் மக்கள், தங்கள் தாயகத்திலிருந்தது மற்ற நாட்டை நோக்கி செல்லும் போது கடலில் இயற்கையாக ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் அனுபவங்களை “புயலிலே ஒரு தோணி” என்னும் புதினம். தொகைநிலைத் தொடர் பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும் விளக்கும் பகுதியே “தொகைநிலைத் தொடர்கள்” எனும் இலக்கணப் பகுதி. இவையே “உயிர் ஓசை” எனும் பொருண்மையின் கீழ் அமைந்த தலைப்புகள் ஆகும்.

உரைநடை : கேட்கிறதா குரல் 

         இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது. காற்றே எங்கும் நிறைந்திருக்கிறது. மெல்லத் தொட்டுச் சென்றால் தென்றல்;; தூக்கிச் சென்றால் புயல்; அத்தகைய காற்று ஓர் உருவம் கொண்டு நம்மிடம் பேசினால் என்ன பேசும்? ஒரு கற்பணை வடிவம்.
                   காற்றின் இன்றியமையாமையினைப் பற்றி இப்பாடம் விளக்கிக் கூறுகின்றது. காற்றின் பல பெயர்களைப் பற்றியும், வீசும் திசைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. மழையாகி, புயலாகி, தடம் பதிப்பதோடு மின்சாரம் எடுக்கவும் உதவுகிறது. காற்றைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்பலவாகும் என்பதை விளக்கும் வகையில் இந்த உரைநடைப் பகுதி அமைகிறது.

செய்யுள் : காற்றே வா
            உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது. இது தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. காற்றே வருக. மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்யும் இனிய வாசனையுடன் வர வேண்டும். மரங்களின் இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த உயிர்வளியைக் (காற்று) கொடுக்க வேண்டும். காற்றே வருக. எமது உயிர் நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்து போய், அதனை (உயிராகிய நெருப்பை) நீக்கிவிடாதே மிக வேகமாய் வீசி அதனை(உயிராகிய நெருப்பை)  நிறுத்தி விடாதே. காற்றே மெதுவாக, நல்ல சீராக நீண்டகாலம் நின்று வீசிக் கொண்டிருக்க வேண்டும். காற்றே உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாட்டுகள் பாடிப் போற்றி வணங்குகின்றோம் என்று ‘காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம்’ என்பதை உணர்த்தும் வகையில் காற்றை வாழ்த்திப் புகழ்ந்து வசன கவிதையில் பாடியுள்ளார்.

செய்யுள் : முல்லைப்பாட்டு

           பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு. முல்லை நிலத்தைப் பற்றி பாடப்பட்டது. இதனை இயற்றியவர் காவிரிப்பூம்பட்டினத்து பொன் வணிகனார் மகனார் நப்பூதனார். முல்லை நிலத்துப் பெண்கள் தாங்கள் எதிர்பார்த்திருக்கும் ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என்ற ஐயம் ஏற்படும் போது மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கம் போய் தெய்வத்தை தொழுது நின்று அயலார் பேசும் சொல்;லை கூர்ந்து கவனிப்பர். நல்ல சொல் காதில் விழுந்தால் நன்மை என்றும் தீய சொல் கூறின் தீயதாய் முடியும் என்றும் கொள்வார். நும் பாடப்பகுதியில் தலைவிக்காக நற்சொல் கேட்க வந்த முது பெண்டிர் ஒருவர் நற்சொல் கேட்டு மனத்தடுமாற்றம் கொள்ளாதவாறு தலைவியை ஆற்றுப்படுத்துவதாக அமைவதே இந்த செய்யுள் பகுதி.

விரிவானம் : புயலிலே ஒரு தோணி 

                 பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைகச் சேர்ந்தர்கள் குடியேறினர். அவர்களுள் தமிழினமும் ஒன்று. இந்தப் புதினத்தின் ஆசிரியர் ப.சிங்காரம் அவர்கள். புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். புலம்பெயர் மக்கள், தங்கள் தாயகத்திலிருந்தது மற்ற நாட்டை நோக்கி செல்லும் போது கடலில் இயற்கையாக ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் அனுபவங்களை “புயலிலே ஒரு தோணி” என்னும் புதினம் விளக்குகிறது. கடற்கூத்து எனும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதியே இங்கு நமக்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது.

இலக்கணம் : தொகைநிலைத் தொடர்

         பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் எனக் கூறுவர். இந்த தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு வகைப்படுத்தி அவற்றை விளக்குவதே இந்த இலக்கணப் பகுதி.
 

- WTS Teachers Team
Full View

இயல் 3 - கூட்டாஞ்சோறு 

                    வீட்டிற்கு வந்த விருந்தினரை எவ்வாறு உபசரிப்பது என்பதைப் பற்றி சங்க இலக்கிய நூல்கள் மற்றும் காப்பியங்கள் மூலம் விளக்கும் பகுதியாக “விருந்து போற்றுதும்” எனும் உரைநடைப் பகுதி விளக்குகிறது. விருந்தோம்பல் என்பது இல்லற ஒழுக்கம் என்பதை விளக்கும் வகையிவ் “காசிக்காண்டம்” எனும்’ செய்யுள் பகுதி அமைகிறது. அரசரிடம் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் மற்றொரு கூத்தரை உணவு பெறுவதற்கு வழிப்படுத்துவதே “மலைபடுகடாம்” எனும் மற்றொரு செய்யுள் பகுதி. கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற நேயம் போன்றவற்றை கூறுவதே “கோபல்லபுரத்து மக்கள்” எனும் கதைப்பகுதி. தோகைநிலைத் தொடருக்கான விளக்கங்களையும் அவற்றின் வகைகளையும் விளக்கி கூறும் வகையில் அமைந்துள்ள பகுதியே “தொகைநிலைத் தொடர்” எனும் இலக்கணம். திருக்குறளில் ஒழுக்கமுடைமை, பெரியாரைத் துணைக்கோடல், கொடுங்கோன்மை, கண்ணோட்டம், ஆள்வினை உடைமை, நன்றிஇல் செல்வம் போன்ற அதிகாரங்களில் இருந்து சில குறள்கள் மட்டும் “திருக்குறள்” என்ற தலைப்பில் நமக்கு பாடப் பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் “கூட்டாஞ்சோறு” எனும் பொருண்மையின் கீழ் அமைந்த தலைப்புகள் ஆகும்.

உரைநடை : விருந்து போற்றுதும்!

                விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தவர் கருதுகின்றார். முன் பின் அறியாத புதியவர்களே விருந்தினர் ஆவார். ‘விருந்தே புதுமை’ என்கிறார் தொல்காப்பியர். வள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும், ஜெயங்கொண்டாரும் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்று சொல்கின்றனர். தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறர்க்கும் கொடுப்பர் நல்லோர். அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று புறநானூறு கூறுகிறது.
                            தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.  பழந்தமிழர்கள் தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று அறவுணர்வோடு விருந்து போற்றினார்கள் என்பதைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி, கொன்றை வேந்தன் போன்ற நூல்கள் மூலம் விளக்கும் பகுதியே விருந்து போற்றுதும்.

செய்யுள் : காசிக்காண்டம் 

            காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகின்ற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. இந்நூலை இயற்றியவர் அரசர் அதிவீரராம பாண்டியர். விருந்தினரை வரவேற்று விருந்தளிக்கும் முறை, அவர் மனம் மகிழக் கூடிய அளவில் செய்ய வேண்டியது என்ன என்பதை காசிக்காண்டத்தின் பதினேழாவது பாடல் வரிசைப் படுத்திக் காட்டுகிறது. விருந்தோம்பல் செய்யும் போது ஒன்பது செயல்கள் இடம்பெற வேண்டும் என்றும் விருந்தோம்பல் என்பது இல்லற ஒழுக்கம் என்று இப்பாடல் வலியுறுத்துகிறது.

செய்யுள் : மலைபடுகடாம் 

                    பாத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைப்படுகடாம். இது ‘கூத்தராற்றுப்படை’ எனவும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத் திறன்களை எடுத்துக்காட்டி மக்களை மகிழ்வித்து அதற்குப் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். இங்கே நன்னன் எனும் வள்ளலைப் பாடி பரிசில் பெற்ற கூத்தர்கள், அவரைப் பார்த்து பரிசில் பெறப் போகும் கூத்தர்களைப் பார்த்து நன்னனின் பெருமைகளை கூறி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதலாக “மலைகடுகடாம்” எனும் இச்செய்யுள் பகுதி அமைந்துள்ளது.

விரிவானம் : கோபல்லபுரத்து மக்கள் 

             ரோட்டோர புஞ்சை நிலத்தில் அருகு எடுத்துக் கொண்டிருந்த சுப்பையா தன்னை நோக்கி வரும் அன்னமய்யா, மற்றும் அவனுடன் வறுமையினாலும், பசியினாலும் வயோதிகத் தோற்றம், கொண்ட மணி என்ற வாலிபனைப் பார்த்து வியந்தான்.
                                   அன்னமய்யா தான் அழைத்து வந்த வாலிபனுக்கு நீச்சுத் தண்ணீரும் சோற்று மகுளியும் அளித்து புது தெம்பைக் கொடுத்தான்.  இருவரும் சுப்பையாவின் புஞ்சை நிலக் களத்து மேட்டுப் பகுதியில் அருகு எடுக்க வந்தவர்களுடன் கூடிக் கூட்டாஞ்சோறு உண்டார்கள்.
                                     உணவுக்கு பின் அனைவரும் கைகழுவாமல் மண்ணால் கைகளைச் சுத்தப்படுத்தியதைப் பார்த்து வாலிபனும் மண்ணை எடுத்துக் கைகளில் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொண்டான்.
                      கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கி.ராஜ நாராயணன். கோபல்ல கிராமம் என்னும் புதினத்தை தொடர்ந்து எழுதப்பட்ட கதை. எழுத்தாளர் தன் சொந்த ஊரான இடைச்செவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் தன் கற்பனையையும் புகுத்தி படைத்துள்ளார். கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்கிற நேயம் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.  

இலக்கணம் : தொகாநிலைத் தொடர்கள்

                               ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் ஆகும். இந்த தொகாநிலைத் தொடரானது எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர்;, வினையெச்சத்தொடர், வேற்றுமைத்தொடர், இடைச்சொல்தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர் என ஒன்பது வகையாகப் பிரிக்கப்பட்டு அவற்றை விளக்குவதே இந்த இலக்கணப்பகுதி.

திருக்குறள் 

                        ஒழுக்கத்தின் சிறப்பு பற்றியும், பெரியவர்களை துணைக்கொள்வதால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றியும், இரக்கச் செயல் பற்றியும் சில திருக்குறளில் கூறியுள்ளார். மேலும் மன்னன் என்பவன் ஆட்சி எனும் அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு நன்மையை மட்டுமே செய்ய வேண்டுமே தவிர தீமை செய்யக் கூடாது என்றும், முயற்சியின் முக்கியத்துவம் பற்றியும், பிறருக்கு கொடுத்து வாழ்வதன் பயன்கள் பற்றியும் கூறியுள்ளார். அவற்றில் சில பாடல்கள் மட்டும் நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

- WTS
Full View

இயல் 4 - நான்காம் தமிழ்

                          மனிதனால் இயலாதவற்றைச் செய்யும் எந்திரமனிதனுடைய செயற்கை நுண்ணறிவின் செயல்களைப் பற்றி விளக்குவதே “செயற்கை நுண்ணறிவு” எனும் உரைநடைப் பகுதி. பல துன்பங்கள் வந்தாலும் இறைவனை மறவாது போற்ற வேண்டும் என்பதை விளக்கும் வகையில் “பெருமாள் திருமொழி” எனும் செய்யுள் பகுதி அமைகிறது. ஐம்பூதங்களின் தோற்றம் பற்றி விவரிப்பதே “பரிபாடல்” எனும் செய்யுள் பகுதி. அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்காத உடலைக் கொண்டிருந்த சில தினங்களே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஒருவர் அறிவியல் உலகிற்கு அரிய பல கண்டுபிடிப்புகளை வழங்கி வாழ்க்கையில் சாதனைகளை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வரலாற்றைப் பற்றி கூறுவது “விண்ணைத் தாண்டிய தன் நம்பிக்கை” எனும் விரிவானப் பகுதி. இலக்கணத்தில் திணை, பால், இடம், வழு, வழுவமைதி, வழாநிலை, வழுவமைதியின் வகைகள் போன்ற பொதுவான விளக்கங்களைக் கூறுவதே “பொது” எனும் இலக்கணப் பகுதி. இவையே “நான்காம் தமிழ்” எனும் பொருண்மையின் கீழ் அமைந்த தலைப்புகள் ஆகும்.

உரைநடை : செயற்கை நுண்ணறிவு

                      எந்த ஒரு புதிய தொழில் நுட்பமும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை. 1980-களில் அறிமுகமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணு புரட்சிக்கு காரணமாயின. அவற்றுள் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு. இதனை ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல் திட்ட வரைவு எனலாம். அது தானாகக் கற்றுக் கொள்ளக் கூடியது. இந்த அறிவைக் கொண்டு தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப் போல தானே முடிவெடுக்கும் திறனுடையது. அவ்வாறு கற்றுக் கொண்டதை தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் நேரங்களில் செயல்படுத்தும். செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை. அவற்றால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்பதே அதன் சிறப்பு. மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக் கூடியது நுண்ணறிவு.

                மனிதன் செய்யும் பல்வேறு வேலைகளைக் கணினி எளிதாக்குகின்றது. கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதைபாடும் ரோபோக்கள், ஆளில்லாமல் நடத்தப்படும் வணிகக் கடைகள், மனிதனால் இயலாதவற்றைச் செய்யும் எந்திரமனிதன் ஆகியவை செயற்கை நுண்ணறிவின் செயல்களைப் பற்றி விளக்குகிறது.

செய்யுள் : பெருமாள் திருமொழி

                    பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். பக்தி இலக்கியமான இதில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவர் உடலில் உள்ள புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். அதைப் போல வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன் என்று பல துன்பங்கள் வந்தாலும் இறைவனை மறவாது போற்ற வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

செய்யுள் : பரிபாடல்

                      மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சாயல் துளியும் இல்லாமல் படைக்கப்பட்ட தமிழர் இலக்கியங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் கருத்துக்கள் இன்றளவும் அவற்றோடு ஒத்துப் போவதை அறிகையில் பெருவியப்பு மேலிடுகிறது. இந்தப் பூமி எப்படி தோன்றியது என்பது பற்றி எட்டுத்iதொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலில் காணக்கிடைக்கிறது. இதனை இயற்றியவர் கீரந்தையார். எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் எனும் முதல் பூதத்தின் ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாக பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்து போல புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது. பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. ஆச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலை பெறும்படியான ஊழிக்காலம் வந்தது என ஐம்பூதங்களின் தோற்றம் பற்றி இப்பாடலில் விவரிக்கப்படுகின்றது.

விரிவானம் : விண்ணைத் தாண்டிய தன் நம்பிக்கை

                       அறிவியல் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது. பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது. இயற்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அறிவியல் சிந்தனை போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. அதிலும் 21 வயதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்னும் சில தினங்களே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஒருவர், உலகமே ஆச்சரியப்படும்படி மேலும் 53 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து பேரண்டப் பெருவெடிப்பு கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து அபூர்வமான முடிவுகளை உலகுக்கு அளித்த ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளியின் அசாத்தியமான தன்னம்பிக்கை நாமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. உடல் முழுவதும் பல பிரச்சினைகளை கொண்டவர் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங். அறிவியல் ஆராய்ச்சிக்கு இவரது உடல் ஒத்துழைக்காத போதும் அறிவியல் உலகிற்கு அரிய பல கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளாhர்;. அத்தகைய ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை சாதனைகளை இவ்விரிவானம் விளக்குகிறது.

இலக்கணம் : பொது

                ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை என்றும் வழங்குவர். பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும். இது ஐந்து வகைப்படும். இவை ஐந்தும் இரு பிரிவுக்குள் அடங்கும். மேலும் தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் வழாநிலை என்றும், இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு என்றும், இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால்   ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதி என்றும் கூறுவர். இந்த வழுவமைதியானது திணை, பால், இடம்;, காலம், மரபு என ஐந்து வகைகளையும் விளக்கிக் கூறுவதே இந்த இலக்கணப் பகுதியாகும்.

- WTS Teachers Team
Full View

இயல் 5 - மணற்கேணி

                         மொழிகளுக்கிடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவும் மொழிபெயர்ப்பு பற்றி விவரிப்பதே “மொழிப்பெயர்ப்புக் கல்வி”. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே என்பதை விளக்கும் வகையில் அமைவதே “நீதிவெண்பா” எனும் செய்யுள் பகுதி. இடைக்காடனாருக்கு சிவபெருமான் அருள் புரிந்த வரலாற்றைப் பற்றிக் கூறுவதே “திருவிளையாடற் புராணம்” எனும் மற்றொரு செய்யுள் பகுதி. படிப்பறிவு மறுக்கப்பட்ட கருப்பின மக்களில் படிப்பறிவு பெற்ற முதல் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன சந்திந்த துயரங்களை காட்டுகிறது “புதிய நம்பிக்கை” எனும் விரிவானப் பகுதி. வினா, விடை, பொருள்கோளின் வகைகளை விளக்கி கூறும் வகையில் அமைவதே “வினா, விடை வகைகள், பொருள்கோள்” எனும் இலக்கணப் பகுதி. இவையே “மணற்கேணி” எனும் பொருண்மையில் அமைந்த தலைப்புகள். 

உரைநடை : மொழிப்பெயர்ப்புக் கல்வி 

        மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை நீடிக்க விடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிப்பெயர்ப்பு. நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது மொழிபெயர்ப்பு. அது எல்லாக் காலக் கட்டங்களிலும் தேவையான ஒன்று. இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தேசிய உணர்வை ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் நமது அரசு மொழிப்பெயர்ப்பை ஒரு கருவியாக கொண்டது. மொழி பெயர்ப்பை கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு. இதுவே மொழிபெயர்ப்புக் கல்வி. மொழிகளுக்கிடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்கவிடாமல் ஒற்றுமைப்படுத்த உதவும் மொழிபெயர்ப்பு பற்றி விளக்கமாக கூறுகிறது.  

செய்யுள் : நீதிவெண்பா

                 தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுறக்கும் என்கிறது திருக்குறள். கல்வியின் சிறப்பை போற்றுவதை புறநானூற்று காலத்;திலிருந்து தற்காலம் வரை தொடர்கின்றனர் தமிழர். அந்த வரிசையில் ‘சதாவதானி’ என்று புகழப்படும் செய்குத் தம்பி பாவலர் எனும் புலவர் கல்வியின் மேன்மையை சுருக்கமாகவும் சுவையாகவும் நீதி வெண்பாவில் கூறுகிறார். அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்கு தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

செய்யுள் : திருவிளையாடற் புராணம்

                      திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. திரு ஆலவாய்க் காண்டம் பகுதியில் ஒரு புலவனின் மனவேதனையைக் கண்டு கடம்ப வனக் கோயிலை விட்டு நீங்கிய கதை பாடப்பகுதியாக அமைந்துள்ளது. குலேச பாண்டியன் எனும் மன்னன் கல்வியறிவு மிக்கவன் எனக் கற்றோர் கூறக் கேட்டு, இடைக்காடனார் எனும் புலவர் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று தாம் இயற்றிய கவிதையைப் படித்தார். மன்னனோ அதைப் பொருட்படுத்தாமல் புலவரை அவமதித்தான். மனம் நொந்த இடைக்காடனார் இறைவனின் சந்நிதியில் விழுந்து வணங்கி தமிழறியும் பெருமானே! குலேச பாண்டியன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்து தலையசைக்காமல் புலமையை அவமதித்தான். அவன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவாக வீற்றிருக்கும் பார்வதி தேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான் என்று சினத்துடன் இடைக்காடன் சிவபெருமானிடம் கூற அதைக் கேட்டு சிவபெருமான் அருள் புரிந்த வரலாற்றை கூறுவதே இந்த செய்யுள் பகுதி. 

விரிவானம் : புதிய நம்பிக்கை

                      மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு சிலர்தான்; வரலாறாக மாறுகிறார்கள். பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப் பாதை போட்டு அதையே பெருஞ்சாலையாக மாற்றுகிறார்கள். கல்வி அறிவற்ற இருடடுச் சமூகத்தில் ஒற்றைச் சுடராக வந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றுகிறார்கள். உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன் அவரின் வாழ்க்கையே இங்கு பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பறிவு மறுக்கப்பட்ட கருப்பின மக்களில் படிப்பறிவு பெற்ற முதல் பெண்மணியான அவர் சந்திந்த துயரங்களை காட்டுகிறது புதிய நம்பிக்கை எனும் விரிவானம். 

இலக்கணம் : வினா, விடை வகைகள், பொருள்கோள்

                      மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது. அவற்றைப் பற்றி நன்னூலார் விளக்கியிருக்கிறார். வினாவானது அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என ஆறு வகைப்படுத்தியும், விடையானது சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை எட்டு வகையாகவும் கூறுகிறார். மேலும் பொருள்கோள் எட்டு வகையாகவும் அவற்றுள் ஆற்றுநீர்ப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கள், கொண்டுக் கூட்டுப் பொருள்கோள் என இவை மூன்று மட்டுமே பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இவையே வினா, விடை வகைகள், பொருள்கோள் எனும் இலக்கணப் பகுதியில் அமைந்த செய்திகள்.
 

- WTS Team
Full View

இயல் 6 - நிலா முற்றம்

                               நிகழ்கலைகள் கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. ஆடல், பாடல், இசை, நடிப்பு, ஒப்பனை, உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன; இவை மக்கள் பண்பாட்டின் பதிவுகளாக விளங்குகின்றன. இவற்றின் பல்வேறு வகைகள், வடிவங்கள், இன்றைய நிலை ஆகியன பற்றி விவரிப்பதே “நிகழ்கலை”. நாரெடுத்து நறுமலர் தொடுக்கும் பெண்ணின் மென்விரலின் அழகு பற்றி விவரிப்பதே “பூத்தொடுத்தல்;” எனும் செய்யுள் பகுதி. முருகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடுவதே “முத்துக்குமாரசாமி பிள்;ளைத்தமிழ்” எனும் செய்யுள் பகுதி. நம் பாடப் பகுதியில் பால காண்டம், அயோத்தியா காண்டம், யுத்த காண்டம் மூன்றிலிருந்தும் அழகுணர்ச்சி மிக்கப் பாடல்கள் சிலவற்றை விளக்குவதே “கம்பராமாயணம்” எனும் மற்றுமொரு செய்யுள் பகுதி. அனுமார் வேடமிட்ட தெருக்கூத்துக் கலைஞர் ஒருவரைக் கண்டு அவர் காட்டும் வித்தைகளை அழகு என்று சிறுவனும் கற்று மகிழ்வதே “பாய்ச்சல்” எனும் கதைப்பகுதி. அகத்திணை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்றவற்றை விளக்குவதே “அகப்பொருள் இலக்கணம்” மேலும் திருக்குறளில் அமைச்சு, பொருள் செயல் வகை, கூடாநட்பு, பபை மாட்சி, குடிசெயல் வகை, நல்குரவு, இரவு, கயமை போன்ற அதிகாரங்களிலிருந்து சில குறள்கள் “திருக்குறள்” எனும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் “நிலா முற்றம்” எனும் பொருண்மையில் அமைந்த தலைப்புகள் ஆகும்.

உரைநடை : நிகழ் கலை

                        ஆடல், பாடல், இசை, நடிப்பு, ஒப்பனை, உரையாடல் இவற்றின் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்பவை. நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பவை. அவை தான் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள். சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க முடியாதவை. சமுதாய நடப்பின் ஆவணமாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. நிகழ்கலைகள் கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. இவை மக்கள் பண்பாட்டின் பதிவுகளாக விளங்குகின்றன. இவற்றின் பல்வேறு வகைகள், வடிவங்கள், இன்றைய நிலை ஆகியன பற்றி இப்பாடம் விவரிக்கிறது.

செய்யுள் : பூத்தொடுத்தல்

                       தத்தித் தாவும் குழந்தை முதல் தள்ளாடும் முதியவர் வரை யாரும் அழகுணர்ச்சி மிக்கவர்களே! பெண் கவிஞரான உமா மகேஸ்வரி ஒரு பூத்தொடுக்கும் பெண்ணின் மனநிலையை அழகுணர்ச்சியுடன் விவரிக்கிறது. இந்தப் பூவை எப்படித் தொடுப்பது? அமைதியான ஓர் உலகத்தைச் சுமக்கின்றன இந்த ஒல்லித்தண்டுகள். இறுக்கமாக முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறிந்து விடும். தளரக் கட்டினால் மலர்கள் நழுவி தரையில் விழும். தான் முன்னால்; மரணம் நிற்பதை அறிந்தும் வருத்தப்படாமல் சிரிக்கும் இந்தப்பூவை எப்படி நான் சேர்த்துக் கட்டுவது ஒருவேளை என் மனத்தையே நூலாக்கும் நுட்பத்தை அறிந்தால் மட்டுமே தொடுக்க இயலுமோ என்று நாரெடுத்து நறுமலர் தொடுக்கும் பெண்ணின் மென்விரலின் அழகு விவரிக்கும் வகையில் இச்செய்யுள் பகுதி அமைகிறது.

செய்யுள் : முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

             தொண்ணூற்றி ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பிள்ளைத் தமிழ். இதில் இறைவனையோ, தலைவனையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவதாகும். இதில் குமரகுருபரர் முருகனை குழந்தையாகப் பாவித்து பாடுகிறார். குழந்தையின் தலை முதல் கால் வரை அணிவிக்கப்பட்ட அணிகலன்கள் ஒவ்வொன்றையும் வர்ணித்துப் பாடும் பகுதி நமக்கு பாடமாக கொடுக்கப்பட்டடுள்ளது. திருவடியில் அணிந்து சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்த்து ஆடட்டும். இடையில் அரைஞான் மணியோடு ஒளிவீசுகின்ற அரை வடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும். உச்சிக்கொண்டையும் அதில் கட்டப்பட்டுள்ள ஒளி வீசும் முத்துக்களும் ஆடட்டும். தொன்மையான வைத்யநாதபுரியிலே எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க. இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக என முருகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடுவதே இச்செய்யுள் பகுதி.

செய்யுள் : கம்பராமாயணம்

                      கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா! என்று பாரதி சொல்வதை கம்ப ராமாயணப் பாடல்களில் உணர முடியும். நம் பாடப் பகுதியில் பால காண்டம், அயோத்தியா காண்டம், யுத்த காண்டம் மூன்றிலிருந்தும் அழகுணர்ச்சி மிக்கப் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆற்றுப்படலத்தில் சரயு நதியின் வளத்தைப் பற்றியும், நாட்டுப்படலத்தில் மருதநிலத்தின் இயற்கை அழகு, பெருமை பற்றியும், கங்கைப்படலத்தில் இராமனின் பண்புகளை வர்ணித்தும் கூறுகிறது. மேலும் கங்கை காண் படலத்தில் குகன் இராமன் மேல் வைத்துள்ள அன்பு பற்றியும் கும்பகருணன் வதைப்படலத்தில் கும்பகருணனை எழுப்பும் காட்சி பற்றியும் விளக்கிக் கூறுகிறது. இச்செய்தியே கம்பராமாயணம் எனும் செய்யுள் பகுதியில் அமைந்துள்ளது.

விரிவானம் : பாய்ச்சல்

                          உண்மைக் கலைஞன் தன் கலையின் முழு ஈடுபாட்டையும் காட்டுவான். அப்படி ஈடுபடும் போது அவனுக்கு வயதோ உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துதில்லை. தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறதைப் பார்க்கிற போது அவன் அடையும் மகிழ்ச்சி எல்லையற்றது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து இடம் பெற்றுள்ள பாய்ச்சல் என்ற சிறுகதை இங்கு பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது. அனுமார் வேடமிட்ட ஒரு தெருக்கூத்துக் கலைஞர், ஊருக்குள் வித்தைகளை காட்டுகிறார். அந்த வித்தைகளை பார்த்த அழகு என்ற சிறுவன் அந்த கலைஞரையே பின் தொடர்ந்து, அவர் ஓய்வு எடுக்கும் போது அவரிடம் சில வித்தைகளை கற்று மகிழ்ச்சி அடைகிறான்.

இலக்கணம் : அகப்பொருள் இலக்கணம் 

    பொருள் என்பது ஒழுக்க முறை தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது அகத்திணை. இந்த அகத்திணைகள் ஏழு வகையாக பாகுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் ஐந்தும் அன்பின் ஐற்திணைகள் ஆகும். இவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பிரிவுக்குள் அடங்கும். இதில் முதற்பொருள் என்பது நிலமும், பொழுதும் ஆகும். இந்த பொழுதானது பெரும் பொழுது, சிறு பொழுது என இருவகைப்படும். ஒரு ஆண்டினை ஆறு கூறுகளாக பகுத்து அவற்றை பொரும் பொழுதும் என்றும், ஒரு நாளின் ஆறு கூறுகளைப் பகுத்து அவற்றை சிறு பொழுது என்றும் கூறுவர். இவையே அகப்பொருள் இலக்கணத்தில் விவரித்து கூறப்பட்டுள்ளது.

திருக்குறள் 

                     உலகப் பொது மறையாகப் போற்றப்படும் திருக்குறளில் வயது வேறுபாடின்றி எல்லாருக்கும் தேவையான கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றை நம் பாடப் பகுதியில் காண்போம். அமைச்சு என்னும் அதிகாரத்தில் ஒரு சிறந்த அமைச்சருக்கு தேவையான தகுதிகள் யாதெனில் மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடா முயற்சி ஆகிய ஐந்தும் அவசியமான தகுதிகள் என வலியுறுத்துகிறார்.பொருள் செயல் வகை அதிகாரத்தில் ஒருவர் தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காப்பது போன்றது. கூடா நட்பு எனும் அதிகாரத்தில் தொழுது நிற்கும் பகைவரின் கையின் உள்ளும், கொலைக் கருவி மறைந்து இருக்கும். அது போல அவர் அழுத கண்ணீர் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு போற்றுவர். கயமை எனும் அதிகாரத்தில் தேவரும் கயவரும் ஒரு தன்மையர். எவ்வாறு எனில் தேவர்களைப் போலவே கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்.

 

- WTS Team
Full View

இயல் 7 - விதை நெல்

                   மா.பொ.சிவஞானம் அவர்கள் தன் வரலாற்றைப் பற்றிக் கூறுவதே “சிற்றகல் ஒளி” எனும் உரைநடைப்பகுதி. பூட்டுதலின் சிறப்பு, வேளாண்தொழிலின் சிறப்புகள் பற்றியும் கூறுவது “ஏர் புதிதா” எனும் செய்யுள் பகுதி. சோழனின் ஆட்சி சிறப்பினையும் அவன் ஆட்சி செய்த நாட்டின் வளத்தையும் விளக்கும் வகையில் அமைவதே “மெய்க்கீர்த்தி” எனும் செய்யுள் பகுதி. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகள், விற்கப்பட்ட பொருள்கள் மற்றும் அங்கு வாழ்ந்த தொழில்புரிவோர்கள் பற்றியும் கூறுவதே “சிலப்பதிகாரம்” எனும் மற்றுமொரு செய்யுள் பகுதி. மகளிர் தின விழாவின் முக்கியத்துவம் பற்றியும், தங்கள் திறமையாலும் ஆளுமையாலும் போராடி வெற்றி பெற்று புகழ்க் கொடி நாட்டிய பெண்கள் சிலரின் வேடமணிந்து பள்ளியில் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றை நடித்துக் காட்டுவதே “மங்கையராய்ப் பிறப்பதற்கே” எனும் விரிவானப் பகுதி. வெட்சி முதலான பன்னிரண்டு புறத்திணைகளைக் கூறி அவற்றிற்கான விளக்கங்களை எடுத்துரைப்பதே “புறத்திணை இலக்கணம்”. இவை அனைத்தும் “விதைநெல்” எனும் பொருண்மையின் கீழ் அமைந்த தலைப்புகள் ஆகும்.

 உரைநடை : சிற்றகல் ஒளி

              ஒரு படைப்பாளி தன்னை முன் வைத்து தன் நாட்டின் வரலாற்றை கூறும் நிலை சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் ம.பொ.சிவஞானம். சிலம்புச் செல்வர் என்று போற்றப்படும் அவர் சுதந்திரப் போராட்;ட வீரர். சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும் சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழகத்தின் எல்லைகளைக் காக்க நடத்தப்பட்ட போராட்டங்களைப் பற்றி நமக்குப் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தன் வரலாறு எனும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து, அது போல எழுத முற்படுதல். வரலாற்றின் போக்கினை மாற்றி வடிவமைத்தவர்களின் வாழ்க்கைக் கதையைத் தன் வரலாறாகப் படிப்பது நம்மையும் அந்த வரலாற்றுப் பாத்திரமாக உணர வைக்கும். கதைப் படிப்பது ஒருவரைப் படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துகிறது. அப்படிப் படைப்பாளியான மா.பொ.சிவஞானம் அவர்கள் தன் வரலாற்றைப் பற்றிக் கூறுவதே ‘சிற்றகல் ஒளி’ எனும் உரைநடைப்பகுதி.

செய்யுள் : ஏர் புதிதா?

                      கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். விவசாயம் செழிக்க வேண்டி சித்திரை திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் என்பது தமிழர் பண்பாட்டின் சிறப்பாகும். அந்நிகழ்ச்சியை மேன்மைப் படுத்தி அவர் எழுதியிருக்கும் கவிதைதான் இது. முதல் மழை விழுந்து மேல் மண் பதமாகி விட்டது. விடிவெள்ளி முளைத்து விட்டது. களைகளை ஓட்டிக் கொண்டு விரைந்து கழனிக்கு போ நண்பா! பொன்னுக்குச் சமமான ஏரைத் தொழுது, மாட்டைப் பூட்டி நிலத்தை கீறுவாயாக! ஏர் புதிதல்ல… காடும் புதிதல்ல. கரையும் பழக்கமானதுதான். நும் கை புதிதா? இல்லை இன்றைய நாள்தான் புதிது. நட்சத்திரம் புதிது. நமது ஊக்கம் புதிது. எனவே மாட்டைத் தூண்டி கொழுவை மண்ணிலே அழுத்திப்பிடி மண் புரண்டு கொடுக்கும். முழை பொழிய ஆரம்பிக்கும். நிலம் சிலிர்க்கும் பிறகு நாற்று முளை விட்டு தலை நிமிர்ந்து நிற்கும். எல்லைத் தெய்வம் நம்மையெல்லாம் காத்து நிற்கும். இதோ கிழக்கு வெளுக்குது. போன் போன்ற கதிரவனின் ஒளி ஏரில் பரவும் நல்ல வேலையில் நிலத்தை உழுதிடுவாய். இச்செய்யுள் பகுதி ஏர் பூட்டுதலின் சிறப்பு, வேளாண்தொழிலின் சிறப்புகள் பற்றி கூறிகிறது.

செய்யுள் : மெய்க்கீர்த்தி

                            அரசர்கள் தங்கள் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைத்திருக்க விரும்பி அதனைக் கல்லில்  செதுக்கினார்கள். பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம் சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது. இரண்டாம் ராசராச சோழனது மெய்க்கீர்த்தி ஒரு பகுதி பாடமாக உள்ளது. இது நாட்டின் வளத்தையும் ஆட்சி சிறப்பையும் ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது. சோழனின் ஆட்சிச்சிறப்பினையும் அவன் ஆட்சி செய்த நாட்டின் வளத்தையும் விளக்கும் வகையில் இச்செய்யுள் பகுதி அமைகிறது.

செய்யுள் : சிலப்பதிகாரம்

         ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம், புகார்க் காண்டத்தில் இந்திரவிழா ஊரெடுத்த கதையிலிருந்து இந்தப் பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். பண்டையக் காலந்தொட்டே வாணிபமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகள், விற்கப்பட்ட பொருள்கள் மற்றும் அங்கு வாழ்ந்த தொழில்புரிவோர்கள் பற்றி இப்பகுதி விளக்குகிறது.

விரிவானம் : மங்கையராய்ப் பிறப்பதற்கே

                       மகளிர் தின விழாவின் முக்கியத்துவம் பற்றியும், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சின்னப்பிள்ளை ஆகிய புகழ்பெற்ற பெண்மணிகள் பற்றியும் இந்தத் துணைப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது. மகளிர் தினத்தன்று அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் நடக்கும் மகளிர் தின விழாவின் கலை நிகழ்ச்சியில் தங்கள் திறமையாலும் ஆளுமையாலும் போராடி வெற்றி பெற்று புகழ்க் கொடி நாட்டிய பெண்களின் வேடமணிந்து வந்து தாங்கள் சாதித்தது எப்படி என்பதை சுருக்கமாக எடுத்துக்கின்றது இந்த விரிவானப் பகுதி. 

இலக்கணம் : புறப்பொருள் இலக்கணம்

                       புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. இவை வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும். வெட்சித் திணையில் பகைவரது ஆநிரை கவர்தலும், கரந்தை திணையில் பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டு வருதலும், வஞ்சித் திணையில் ;பகை நாட்டின் மீது போர் தொடுத்தலும், காஞ்சித் திணையில் பகைவரை எதிர்த்துப் போரிடுதலும், நொச்சித் திணையில் பகைவரிடமிருந்து மதிலைக் காத்தலும், உழிஞைத் திணையில் பகைவர் மதிலைச் சுற்றி வளைத்தலும், தும்பைத் திணையில் பகை மன்னர் இருவரும் போரிடுதலும், வாகைத் திணையில் போரில் வெற்றி பெற்ற மன்னரைப் புகழ்தலும் ஆகும். மேலும் பாடாண் திணை, பொதுவியல், பெருந்திணை, கைக்கிளை போன்றவற்றிற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
 

- WTS Team
Full View

இயல் 8 - பெருவழி

                         சங்க இலக்கிய நூல்களில் உள்ள பல அறச் செயல்களை விவரிப்பதே “சங்க இலக்கியத்தில் அறம்” எனும் உரைநடைப்பகுதி. வீட்டை மராமத்து பார்த்து சரிசெய்யும் போது அது அத்துடன் முடிந்து விடாது. மேலும் மேலும் அதை பாராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் “ஞானம்” எனும் செய்யுள் பகுதி விளக்குகிறது. கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன? அவன் பணி என்ன? எனும் கேள்விகளுக்கு விடை தருவதோடு தன்னைப் பற்றிய சுய விளக்கத்தையும் சுய விமர்சனத்தையும் நம் முன் வெளிப்படையாக வைப்பதே “காலக்கணிதம்” என்ற கவியரசர் கண்ணதாசனின் மற்றொரு செய்யுள் பகுதி. இராமானுசர் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்று “இராமனுசர் நாடகம்” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பா வகைகளையும், அலகிடும் முறையையும் விவரிப்பது “பா வகை, அலகிடுதல்” எனும் இலக்கணப் பகுதி. இவையே பெருவழி எனும்; பொருண்மையின் கீழ் அமைந்த தலைப்புகள்.

உரைநடை : சங்க இலக்கியத்தில் அறம்

                       சங்க காலத்தில் தமிழர் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர். மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் சங்க காலம். அக்கால வாழ்க்கையிலிருந்து உருவான அறங்களே சங்க இலக்கியங்களில் பதிவுபெற்றுள்ளன. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்று கூறப்பட்டது. நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்று புலவர்களும் எடுத்துரைத்துள்ளனர். சங்கப் பாடல்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. நீர்நிலை பெருக்கி நில வளம் கண்டு உணவுப் பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்ல்ப்பட்டது. தமிழர் போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோரை எதிர்த்து போர் செய்யாமையைக் குறிக்கிறது. மன்னர்களுடைய செங்கோலும் வெண் கொற்றக் கொடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. இது போன்ற சங்க இலக்கியங்கள் உள்ள பல அறச் செயல்களை விவரிப்பதே இந்த உரைநடைப் பகுதி.

செய்யுள் : ஞானம் 

                     எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றிய தி.சொ.வேணு கோபாலன் ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். அவருடைய கவிதைத் தொகுப்பான ‘கோடை வயல்’ என்ற நூலில் இருந்து ஞானம் என்ற பாடல் நமக்கு பாடப் பகுதியில் தரப்பட்டுள்ளது. அதாவது வீட்டை மராமத்து பார்த்து சரிசெய்யும் வேலை என்பது ஒரு முறையுடன் முடியப் போவதில்லை. காலம் முழுக்க அதை ஓர் அறப்பணியாக நினைத்து தொடர்ந்திட வேண்டுமென கவிஞர் நகைச் சுவையாகக் குறிப்பிடுகிறார். அதை உணர்ந்தவே கவிதைக்கு ஞானம் என்று தலைப்பிட்டுள்ளார்.

செய்யுள் : காலக்கணிதம்

                        முத்தையா எனும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர். 1944ம் ஆண்டு ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடலை எழுதி திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானவர். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர். சேரமான் காதலி எனும் புதினத்துக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார். 
                 கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன? அவன் பணி என்ன? எனும் கேள்விகளுக்கு விடை தருவதோடு தன்னைப் பற்றிய சுய விளக்கத்தையும் சுய விமர்சனத்தையும் நம் முன் வெளிப்படையாக வைக்கிறார் கவியரசர் கண்ணதாசன். கவிஞனாகிய நான் முன் வெளிப்படையாக என் கற்பனையில் தோன்றும் கருவை வைத்து மனிதருக்கு உதவக் கூடிய உருப்படியான கவிதைகளை படைப்பேன். பொன்னை விட விலை மிகுந்த தன் மானமே என் செல்வம். பணம் படைத்தவர் கைகளில் சிக்க மாட்டேன். பதவி என்ற வாளுக்கு பயப்படவும் மாட்டேன். சரியானவற்றை மக்களுக்குச் சொல்வேன். தவறானது என்றால் அதை யார் சொன்னாலும் எதிர்பார்பேன். எனக்கு முந்தைய கவிஞர்களான கம்பன், பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் சொல்லாமல் விட்டுப்போன கருத்துக்களை சொல்லிட முனைவேன். புகழ்ச்சிக்கு மயங்க மாட்டேன். இகழ்வதைக் கண்டு என் உறுதியான மனம் தளர்ந்துவிடாது. மாற்றம் என்ற ஒன்று மட்டுமே இவ்வுலகில் மாறாத தத்துவம். அந்த மாற்றத்தின் திறனறிந்து கவிதை எழுதுவேன். ஆட்சி மாறும் தலைவர்கள் மாறுவர். தத்துவக் கருத்துகள் மட்டுமே அட்சய பாத்திரம் போல் வளரும். நான் கூறும் கருத்துக்களை ஏற்பவர் நானே இருக்கிறேன் என தனது காலக்கணிதத்தில் குறிப்பிடுகிறார்.

விரிவானம் : இராமனுசர் - நாடகம்

                  நாளுக்கு ஒருமுறை மலர்வது சண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி. அதுபோல நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்கள் ஞானிகள். அப்படிப்பட்ட ஞானியருள் ஒருவரான இராமானுசர் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் நமக்குப் பாடப் பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. 
                       பிறவித் தளை நீக்கவும், இறைவனடி செல்லவும் உதவக்கூடிய திருமந்திரத்தை பூரணர்,  இராமானுஜரிடம் கூறுகிறார். மேலும் அம்மந்திரத்தை யாருக்கும் கூறக்கூடாது என்றும் எச்சரிக்கிறார். ஆனால் இராமானுசர்,  பூரணரின் வார்த்தைகளை பொருட்படுத்தாது, கோவிலின் மதில் சுவரில் ஏறி நின்று கொண்டு மக்களை திரட்டி அந்த மந்திரத்தை அறிவிக்கிறார். இதனால் கடும் கோபமடைந்த பூரணர், இராமானுஜரிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்க, அதற்கு இராமானுஜர் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பிறவிப்பிணி நீங்கி பேறு பெறவே இவ்வாறு செய்தேன் எனக் கூறுகிறார். பூரணர் தம் சுயநலத்தை உணர்ந்து, தம் மகனை இராமானுஜரின் சீடராக்கி அனுப்பி வைக்கிறார்.  

இலக்கணம் : பா வகை, அலகிடுதல் 

                         எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புக்களைக் கொண்டது. யாப்பு, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன. பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். அவை செப்பல், அகவல், துள்ளல், தூங்கள் என நான்கு வகைப்படும். செப்பலோசை வெண்பாவிற்குரியது. அகவலோசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இதற்கு அகவற்பா என்ற பெயரும் உண்டு. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளலோசை. இது கவிப்பாவிற்குரியது. தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கு உரியது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, என ஐந்து வகை வெண்பாக்கள் உள்ளன. நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலை மண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன. செய்யுளில் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பது. அந்த அசைக்கேற்ற வாய்ப்பாட்டையும் காணுதல் ஆகும்.

- WTS Team
Full View

இயல் 9 - அன்பின் மொழி

              ஜெயகாந்தனின் காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில், அவரது படைப்பு புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து உரைப்பதே “ஜெயகாந்தம் - நினைவு இதழ்” எனும் உரைநடைப்பகுதி. தலையில் கல் சுமந்து செல்லும் சித்தாளு பெண்ணின் வாழ்க்கை பற்றி விவரிப்பதே “சித்தாளு” எனும் செய்யுள் பகுதி. கருணையன் தாய் இறந்ததால் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்கு கொண்டதை வருணிப்பதே “தேம்பாவணி” என்ற மற்றொரு செய்யுள் பகுதி. எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. துணை இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணை கண்டிப்பாக இருக்கும் என்பதை “ஒருவன் இருக்கிறான்” எனும் விரிவானம் விளக்குகிறது. அணியின் வகைகள் பல இருப்பினும் தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி, தன்மையணி என இவை நான்கை மட்டும் விளக்குவது “அணி” எனும் இலக்கணப் பகுதி. இவையே “அன்பின் மொழி” எனும் பொருண்மையில் அமைந்த தலைப்புகள் ஆகும்.

உரைநடை : ஜெயகாந்தம் - நினைவு இதழ்

                   கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர். இலக்கியத்துக்கான பெரும் விருதுகளை வென்றவர். காந்தத் தன்மையுடைய அவரது எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புகளிலிருந்து 'ஜெயகாந்தம்' எனும் நினைவு இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. 

செய்யுள் : சித்தாளு

              வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து வியக்கிறோம். ஆனால் அதை உருவாக்கப் பாடுபட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை ஏக்கம் நிறைந்த அவர்கள் வாழ்வை நொடியேனும் எண்ணிப் பார்த்ததுண்டா? அவர்களை கவிஞர்கள் நினைக்கிறார்கள். செங்கற்களைப் போலவே இருக்கும் கல் மனங்களுக்குள்ளும் இரக்க உணர்வை கசிய வைத்துவிடுகிறார்கள். 
எண்பதுகளில் கணையாழி பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய முகம்மதுரஃபி எனும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி என்ற கவிஞர் கட்டிட வேலைக்கு செங்கல் சுமக்கும் சித்தாள் பெண் படும்பாட்டை அற்புதமான வரிகளில் படம் பிடித்துக் காட்டுகிறார். 

செய்யுள் : தேம்பாவணி

                தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது. தாயை இழந்து தனித்துறும் துயரம் பெரிது. கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரே கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தன் தேம்பாவணி காப்பியத்தில் இவரை கருணையன் என பெயரிட்டுள்ளார். கருணையன் தன் தாய் எலிசபெத்துடன் காட்டில் வசிக்கையில் தாயார் இறந்து விடுகிறார். அவர் அடையும் துயரத்தில் இயற்கையும் பங்கு கொண்டு ஆறுதல் அளிப்பதாக இப்பாடப்பகுதி பாடல்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

விரிவானம் : ஒருவன் இருக்கிறான்

            கு. அழகிரிசாமியை கரிசல் எழுத்தாளர்களின் வரிசையில்; மூத்தவர் எனலாம். மென்மையான நகைச்சுவையும் சோகமும் இழையோட கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர். எவர் துணையும் இல்லாதிருப்பது இரங்கத்தக்கது. மற்றவர்களால் யாருமற்ற அனாதையென்று அலட்சியமாகப் பார்க்கப்பட்ட ஏழை ஒருவனுக்கும் ஆத்மார்த்தமான நட்பு, அவனுக்காக உருகும் அன்பு மனம் ஒன்று இருப்பதை அறியும் போது மனம் குற்ற உணர்ச்சியில் துடிக்கிறது. அப்படிப்பட்ட ஓர் எளிய மனிதனின் கதைதான் இது. எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. துணை இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணை கண்டிப்பாக இருக்கும் என்பதை ‘ஒருவன் இருக்கிறான்’ என்ற அழகான கதையைப் படைத்துள்ளார் கு.அழகிரிசாமி. இக்கதையின் வாயிலாக நாம் ஒவ்வொருவரிடமும் மனிதம் துளிர்க்கும். 

இலக்கணம் : அணி

                     பெண்களுக்கு அழகு சேர்ப்பவை அணிகலன்கள். அது போலச் செய்யுள்களுக்கு அழகு செய்து சுவை கூட்டுபவை அணிகள். இயல்பாய் நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி. அடுத்து தீவக அணி. செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி. அணியின் வகைகள் பல இருப்பினும் நமக்கு நான்கு அணிகள் மட்டுமே பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

- WTS Team